தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: பல லட்சம் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசம்!
விக்கிரவாண்டி அருகே அட்டை தொழிற்சாலையில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்!

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்திருந்த அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
விக்கிரவாண்டி அட்டை தொழிற்சாலையில் நள்ளிரவு பயங்கர தீ
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பரணி என்பவருக்குச் சொந்தமான அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் குடோன் இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு நேரத்தில், இந்தத் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக திடீரென தீப் பிடித்துள்ளது.
அட்டைகள் எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதால், தீ மளமளவென பரவி தொழிற்சாலை முழுவதையும் ஆக்கிரமித்தது. குடோன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அட்டைப் பெட்டிகள் தீக்கிரையாகின. இதனால் அந்தப் பகுதியே கரும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
தீயணைப்பு வீரர்களின் போராட்டம்
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாகப் போராடினர். தொடர் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து சேத விவரங்கள்
இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைப் பெட்டிகள் மற்றும் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
விபத்து நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை
இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விசாரணை துவங்கி உள்ளனர்.























