பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!
அந்த திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப நிலையில் பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி அதன் பிறகு தானும் ஒரு நல்ல இயக்குனர் என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தவர் தான் எஸ்.பி. ஜனநாதன். தனது திரைப்பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கிய இவர் 2003ம் ஆண்டு வெளியான "இயற்கை" என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். அருண் விஜய், ஷியாம் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா நடிப்பில் வெளியான "ஈ", ஜெயம் ரவியின் "பேராண்மை" மற்றும் விஜய்சேதுபதி, ஆர்யா நடிப்பில் வெளியான "புறம்போக்கு என்கிற பொதுவுடைமை" போன்ற வித்யாசமான கதைக்களம் கொண்ட படங்களை தமிழ் சினிமாவிற்கு இவர் அளித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள "லாபம்" திரைப்படத்தை எழுதி இயக்கியது எஸ்.பி.ஜனநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 61 வயது நிரம்பிய ஜனநாதன் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மார்ச் 11ம் தேதி மாலை 4 மணியளவில் தனது அறையில் சுயநினைவற்ற நிலையில் அவர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது சிகிச்சைபலனின்றி இயற்கையெய்தினர். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலன்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.