திருச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - மைய சமையல் கூடம் தயார்
காலை உணவு திட்டத்தின் மைய சமையல் கூடம் திருச்சியில் ரூபாய் 1.29 கோடியில் கட்டபட்ட கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோலி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று ஆகும். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இதன்படி முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, 6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி என வழங்கப்படவுள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் இந்த பணியை சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும். சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது அவசியம். காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதை கண்காணிக்க வேண்டும். காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கும்போது உணவு பரிமாறுவதற்கு எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உதவி செய்யலாம். மேலும் சுகாதார குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மைய சமையல் கூடம் ரூபாய் 1.29 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டுள்ளது. இந்த காலை உணவு திட்டதினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு இந்த சமையல் கூடத்தில் தினம்தோறும் காலை உணவை சமைத்து திருச்சி மாநகராட்சியில் உள்ள 44 அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 8 மணிக்குள் உணவு சென்றடைய வசதிகள் செய்யபட்டுள்ளது. இந்த திட்டத்தினால் திருச்சியில் சுமார் 3000 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.