புதுக்கோட்டை: சாலை வசதி வேண்டி பள்ளி மாணவன் குடும்பத்துடன் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடியில் சாலை வசதி கேட்டு 4-ம் வகுப்பு மாணவன் குடும்பத்தினருடன் பள்ளி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இனியவன் (வயது 9). இவர், அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த பல மாதங்களுக்கு முன்பு அன்னதானக் காவிரி கால்வாய் சீரமைக்கப்பட்ட பிறகு கால்வாயின் தெற்கு கரை பக்கம் உள்ள தனது வீட்டிற்கு சென்று வர பாதை வசதி இல்லை. இதனால் கால்வாய் கரையின் தெற்கு பகுதியில் சாலை அமைத்து தரக்கோரி முதலமைச்சர் தனிப்பிரிவு முதல் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் என பலருக்கும் மனு அனுப்பியிருந்தான். அமைச்சர் மெய்யநாதனிடமும் கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில் சாலை அமைக்க அமைச்சர் கூறியுள்ளார்.
பல மாதங்கள் கடந்தும் பாதை அமைத்து கொடுக்காததால் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை வசதி செய்து கொடுக்காததால் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவன் இனியவன் நான் வீட்டிற்கு செல்லமாட்டேன் என்று பள்ளியிலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டான். இந்நிலையில் பள்ளியில் போராட்டம் செய்யக் கூடாது என்று கூறியதால் பள்ளியின் வெளியில் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொடர்ந்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு போலீசார் செல்போனில் பேசி ஒரு வாரத்திற்கு பிறகு பாதை அமைப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்