ஆரணி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
ஆரணி அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிய மாணவர்கள்.
அரசு பள்ளிக்கு பேருந்து வசதி இல்லை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சிறுமூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தினம் தோறும் மாணவர்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. இதனால் மாணவர்கள் தினந்தோறும் நடந்து பள்ளிக்கு செல்லும் அவல நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு உயர்நிலை பள்ளிக்கு வருவதற்கு பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அரசு பள்ளி திறப்பில் வாகன வசதி ஏற்படுத்தி பள்ளி நேரங்களில் மட்டும் மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கமாகும்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல அரசு பள்ளி வேன் சிறுமூர் அருகே வடக்கு கொட்டாமேடு பகுதியில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றினார். அந்த பள்ளி வேனை சிறுமூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது வடக்கு கொட்டா மேடு கிராமத்திலிருந்து சிறுமூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்து வரும்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஓட்டுநர் ஜெயகணேஷ் சற்று சாலையின் ஓரத்தில் இருக்கும் மண் தரையில் வேனை இயக்கி முயன்றுள்ளார்.
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
அப்போது நேற்று பெய்த கனமழையால் சாலையின் ஓரத்தில் இருந்த மண்தரையில் பள்ளி வேனை இறக்கியுள்ளார். அப்போது எதிர்பாராமல் வேனின் டயர் சேற்றில் சிக்கியது. பின்னர் வேனை இயக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக வேன் சேற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 10 மாணவ, மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து மாணவர்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.