Tirunelveli: நெல்லையை பீதியில் ஆழ்த்திய கரடி! நள்ளிரவில் அசந்த நேரத்தில் வனப்பகுதிக்கு எஸ்கேப்!
நேற்று பிற்பகலில் மணிமுத்தாறின் பிரதான சாலைகளில் ஒரு கரடி சாலையை கடந்து சென்றது.
நெல்லை மணிமுத்தாறு பகுதி பட்டப் பகலில் ஊருக்குள் புகுந்த கரடியை பொதுமக்கள் விரட்டி அடித்த நிலையில் கரடி மரத்தின் மீது ஏறி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்தௌ வனத்துறை அதனை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் நள்ளிரவில் கரடி வனப்பகுதிக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊருக்குள் புகுந்த கரடி:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புலி, சிறுத்தை, கரடி,யானை, மான், மிளா காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வன விலங்குகள் உணவை தேடி அவ்வப்போது ஊருக்குள் வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் நேற்று ஜூன் 16 ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அங்குள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் பீதி:
நேற்று பட்டப்பகலில் மணிமுத்தாறின் பிரதான சாலைகளில் ஒரு கரடி சாலையை கடந்து சென்றது. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் அந்த கரடி அங்கே உள்ள 9ம் காவல் பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.
மரத்தில் உள்ள கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்களும் அங்குள்ள காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முதல் கட்டமாக தொடங்கினர்.
ஆனால் நள்ளிரவில் கரடி மரத்தை விட்டு இறங்கி வனப்பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.