தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள்- மாவட்டத்தின் வளர்ச்சி தொடருமா..? ..ஓர் அலசல்
நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியை பின்பற்றிய உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி என்பது மாவட்டத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கடந்த 1986 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தனது 36வது வயதை கடந்து 37 வது ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது.சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகு முத்துகோன் போன்ற பல சுதந்திர போராட்டவீரர்கள் வாழ்ந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்திக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
விசைபடகு மற்றும் நாட்டு படகுகளை கடலில் சென்று மீன்பிடித்துவரும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இங்குள்ளனர். மீன்பிடித்துறைமுகம் அமைந்துள்ளதால் மீன் பதப்படுத்துதல், மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி மற்றும் கடலை மிட்டாய் தொழில்கள் பிரதானமாக உள்ளன.
தூத்துக்குடி துறைமுகம் தென் தமிழகத்தில் நுழைவுவாயிலாக உள்ளது. இத்துறைமுகம் நாட்டின் 13 பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இத்துறைமுகம் சர்வதேச சரக்கு பெட்டக முனையமாக மாற உள்ளது. துறைமுகத்தை சார்ந்து பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. தரைவழி, கடல் வழி, ஆகாய வழி, ரயில் வழி என நான்கு வழி போக்குவரத்தை கொண்டுள்ள தமிழகத்தின் ஒரே மாவட்டமாக தூத்துக்குடி விளங்கிவருகிறது. இத்தனை இருந்தும் தொழில் வளர்ச்சியில் தடுமாறுகிறது தூத்துக்குடி.
முன்பு முத்துகுளித்தல் தொழில் நடைபெற்றதால் முத்துநகர் என்றழைக்கப்பட்ட தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி, துறைமுகம், தெர்மல், ஸ்பிக், கனநீர் ஆலை என தொழில் நகராக சிறிது சிறிதாக மாறத்துவங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கிடைக்கும் தாதுமணல் ஏற்றுமதி, டாக் தொழிற்சாலை என விரிவடைந்த நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் தாமிர உருக்காலை அமைத்தது. தொடர்ச்சியாக தனியார் அனல்மின் நிலையங்கள் தூத்துக்குடியை சுற்றிலும் அமைந்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு, சிறுகுறு தொழில்கள், டீக்கடை முதல் கனரக வாகனங்கள் வரை தூத்துக்குடியை நோக்கி வளரத் துவங்கியது. துறைமுக வளர்ச்சி காரணமாக வருவாய் அதிகரிப்பு , அதன் மூலம் சுங்கத்துறைக்கும் வருவாய் அதிகரிப்பு என தூத்துக்குடி தொழில் நகரமானது.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து ஆலை மூடல், பெரும்பாலான தனியார் அனல்மின் நிலையங்கள் மூடல் என வளர்ந்த வேகத்தில் சரிய தொடங்கியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டாலும் கூட எதிர்ப்பு கிளம்பவே அமைதியாகி போனது. தூத்துக்குடியில் அறைக்கலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியை பின்பற்றிய உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி என்பது மாவட்டத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சி என்பது தொழில் துறை, உற்பத்தி துறை, வேளாண்மை துறை வளர்ச்சியை பொறுத்தே உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்று வருகிறது. தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம், அதற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. சென்னையில் வாகன உற்பத்தி தொழில்கள், மென்பொருள் தொழில்கள் என பல்வேறு உற்பத்தி தொழில்களும் அதனை சார்ந்த சேவை தரும் தொழில்களும் அதிகம் உள்ளன.
துறைமுகம் அதை சார்ந்த பகுதிகளில் தான் ஏற்றுமதி இறக்குமதி என சாதகமான பகுதிகளை தேர்வு செய்து தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.அந்தவகையில் உற்பத்தி தொழில்களுக்கு உகந்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் விளங்கி வருவதாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலையில் சறுக்க துவங்கி உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து செயல்படும் தொழிற்சாலைகள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. தமிழக அரசின் வருவாய்க்கு குறிப்பிட்ட சதவீதம் தனது பங்கை செலுத்தியுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த மாவட்டத்தில் தொழில் துறை வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புதிய தொழிற்சாலைகள் வருமா? என்ற கேள்விக்குறிக்கு விடை கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் சிறுகுறு தொழிலில் ஈடுப்பட்டு உள்ளோர். தூத்துக்குடி மாவட்டம் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியே பயணிக்கும் வகையில் அரசு பயணிக்க வேண்டும் என கூறும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கு காத்திருக்கும் இளம் தலைமுறையினர்.