பாகிஸ்தான் போல மானியம் வழங்குங்க... விலை உயர்வால் திண்டாடும் தீப்பெட்டி தொழிலாளர்கள்
பாகிஸ்தானில் கன்டெய்னர் மூலமாக துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படும் தீப்பெட்டிகளுக்கு அந்த அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில்தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக 90 சதவீதம் பெண்கள்தான் தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது. எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரூபாய் 20க்கு குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களை இந்தியாவில் விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் கள்ளச் சந்தை வழியாக பிளாஸ்டிக் லைட்டர் கொண்டுவரப்பட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
அது ஒரு புறம் இருக்க தற்போது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த தீப்பெட்டியும் ஏற்றுமதி செய்ய முடியாமல் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கன்டெய்னர் விலை ஏற்றம். தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய தீப்பெட்டிகள் தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த தீப்பெட்டி கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் கன்டெய்னர்கள் பற்றாக்குறை ஒருபுறம், மறுபுறம் அதன் விலை ஏற்றம்.இதனால் கடந்த எட்டு மாதங்களாக வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது அது முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளது.
ஏற்கனவே உள்நாட்டில் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளதால் மேலும் பாதிப்பு அடையக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மாதம் தோறும் 100 கோடி ரூபாய் வரை துறைமுகங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் லைட்டர் பிரச்சினை காரணமாக தற்போது வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டும் தான் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது. தற்போது வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்பதால், இனி வேலை நாட்களை குறைக்கலாமா என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கன்டெய்னருக்கு அதிக விலை கொடுத்து தீப்பெட்டியை விற்பனைக்கு அனுப்பினால் மற்ற நாடுகளை விட இந்தியாவின் தீப்பெட்டி விலை அதிகமாக இதனால் விற்பனை பாதிக்கப்படும் சூழலையும் ஏற்படும்.
பாகிஸ்தானில் கன்டெய்னர் மூலமாக துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படும் தீப்பெட்டிகளுக்கு அந்த அரசு மானியம் வழங்கி வருகிறது. அதேபோன்று இந்திய அரசும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
16 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல் கொண்டு செல்வதற்கு ரூ.2 லட்ச ரூபாய் வாடகை கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறு முதல் 8 லட்ச ரூபாய் வாடகை கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் அதிக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். சில நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக கப்பல்கள் வழக்கமான வழியில் செல்லாமல் சுற்றி சொல்ல வேண்டி இருப்பதால், இந்த விலையேற்றம் என்று கூறப்படுகிறது.