5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர்: அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு அரசு தபால் மற்றும் கடிதப் போக்குவரத்திற்கு சில தளர்வுகள் மற்றும் விதிவிலக்குகள் அளித்திருந்தும் சுமார் ஐந்து மாதம் கழித்து டெலிவரி செய்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.
5 மாதம் கழித்து கடிதத்தை டெலிவரி செய்த ப்ரொபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் குருநகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ரம்யா. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கு வழியில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது அலுவலகத்திற்கு சம்பளம் பெறுவதற்கான நிதி அறிக்கையினை கடிதம் மூலம் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி திருவாரூர் பனகல் சாலையில் உள்ள ப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில் புக்கிங் செய்து அனுப்புகிறார். இந்த கடிதம் இருபதாம் தேதி தனது அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து தனக்கு ஊதியம் கிடைத்துவிடும் என்று ஜானகி ரம்யா நினைத்திருந்த நிலையில் 22 ஆம் தேதி வரை கடிதம் அலுவலகத்திற்கு சென்று சேரவில்லை. இதுகுறித்து அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டதற்கு 24.03.2020 அன்று கோவிட் காரணமாக புக்கிங் டெலிவரி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலமுறை கடிதம் வாயிலாக திருவாரூர் மற்றும் திருக்குவளை ப்ரொபஷனல் கூரியர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய முறையில் பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்ததுடன் கடந்த 15. 08.2020 ல் அந்த கடிதத்தை டெலிவரி செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜானகி ரம்யா திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு 19.03. 2020 ல் புக்கிங் செய்த கடிதத்தை நான்கு நாட்கள் டெலிவரி செய்ய கால அவகாசம் இருந்தும் புக்கிங் செய்த இடத்திற்கும் டெலிவரி செய்ய வேண்டிய இடத்திற்கும் இடையே குறுகிய சுமார் 25 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் கடிதத்தை டெலிவரி செய்யாமல் இருந்தது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு தபால் மற்றும் கடிதப் போக்குவரத்திற்கு சில தளர்வுகள் மற்றும் விதிவிலக்குகள் அளித்திருந்தும் சுமார் ஐந்து மாதம் கழித்து டெலிவரி செய்துள்ளது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. மேலும் தனது பணி நிமித்தமாக தனது வாழ்வாதாரத்திற்காக அனுப்பப்பட்ட கடிதம் என்று புகார்தாரர் கூறுவது முக்கியமானது.
எனவே ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இதுபோன்று பலரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் என்கிற அடிப்படையில் அதனை கண்டிக்கும் விதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் நலநிதி கணக்கில் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு உள்ளான பேராசிரியர் ரம்யாவிற்கு இழப்பீடாக 50,000 செலுத்த வேண்டும் எனவும் மேலும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையினை திருவாரூர் ப்ரொபஷனல் கூரியர் அலுவலகம் சென்னை நூங்கப்பாக்கத்தில் உள்ள மண்டல ப்ரொபஷனல் கொரியர் அலுவலகம் மற்றும் திருக்குவளை ப்ரொபஷனல் கொரியர் அலுவலகங்களின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்கள் இணைந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து ஆறு வாரத்திற்குள் இந்த தொகையினை வழங்க தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.