பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்... போக்குவரத்து ஏஐடியூசி வலியுறுத்தல்
ஏஐடியுசி நீண்ட நெடிய போராட்டத்தை 18 ஆண்டு காலம் வீதியிலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நடத்தியது.

தஞ்சாவூர்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற்று, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து ஏஐடியுசி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து ஏஐடியுசி தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
போக்குவரத்து கழகங்கள்,அரசு போக்குவரத்து துறையாக (TSTD)இருந்த போது (Madras liberalised pension ) 10 ஆண்டுகள் நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகங்களாக மாறிய பின்பு அத்திட்டம் கைவிடப்பட்டது. வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அரசு துறையில் பணியாற்றிய தொழிலாளர்கள் போக்குவரத்து கழகங்களில் deputation ஆக பணிபுரிந்து வந்தனர். அவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.
அதனை எதிர்த்து ஏஐடியுசி நீண்ட நெடிய போராட்டத்தை 18 ஆண்டு காலம் வீதியிலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நடத்தியது. அதன் விளைவாக சுமார் 7000 தொழிலாளர்களுக்கு ஜிஓ 378 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. தற்போது முன்னாள் அரசு துறையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அரசு மற்றும் போக்குவரத்து ஓய்வூதியம் இணைந்து பெற்று வருகின்றனர்.
1998 முதல் அரசு மற்றும் மின்வாரிய பணியாளர்களை போன்று ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான தொடர்ந்த போராட்டத்தின் விளைவாக ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு தொழிலாளர்களிடம் விருப்புரிமை கேட்கப்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் விருப்புரிமை அடிப்படையில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு 1.28 லட்சம் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாக மாறியது. 2001 முதல் 2003 வரை இரண்டு ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அதை எதிர்த்து போராடிய பின் மீண்டும் ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. 2015 முதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் கூட்டாகவும் ஏஐடியுசி தனித்து நடத்திய பின்பு நீதிமன்றத்தில் ஓய்வூதியத்துடன் இணைந்தது தான் அகவிலைப்படி உயர்வு, அதனை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி படிப்படியாக அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 2003 ஏப்ரல் மாதத்திற்கு பின்பாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் பொருந்தும் என அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பொருந்தாத ஒரு திட்டத்தை போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மீது திணித்தது. ஊதிய ஒப்பந்தங்களின் படி உருவான ஓய்வூதியத் திட்டத்தை அரசாணை மூலம் தடுக்க முடியாது என தொடர்ந்து ஏஐடியுசி உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து போராடி வந்தன.
2008-ல் சீரமைப்பு குழு திமுக அரசின் போது போடப்பட்டது. அதில் ஏஐடியூசி வலுவான வாதங்களை முன்வைத்தது. சீரமைப்பு குழுவினுடைய பரிந்துரையில் மக்கள் நல சேவையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசே பொறுப்பு ஏற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது. ஒவ்வொரு ஊதிய ஒப்பந்தங்களின் போதும் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வந்தோம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அரசின் பரிசீலனைக்கு பின்பு பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்றப்படும் என ஊதிய ஒப்பந்த சரத்துகளில் உறுதி அளிக்கப்பட்டது. திமுக தேர்தல் கால வாக்குறுதியாகவும் அளித்தது.இந் நிலையில் அரசு பணியாளர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐடியுசி சார்பில் அதனை வரவேற்கின்றோம். அரசு போக்குவரத்து கழகத்தில் ஏறத்தாழ 97 ஆயிரம் பேர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர் தற்போது ஒரு லட்சத்து 7 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று சீரமைப்பு குழு பரிந்துரை அடிப்படையில் அரசே பொறுப்பேற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கடந்த 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிமுக அரசால் நிறுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் என்ற திமுக வின் தேர்தல் கால வாக்குறுதியை அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அமல்படுத்திட வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்துகிறது .அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாக பங்களிப்புத் தொகை 12 சதவீதத்தை எடுத்துக்கொண்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து ஏஐடியுசி சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் தெரிவித்துள்ளார்.





















