தஞ்சையில் எலுமிச்சை பழம் வரத்து குறைவால் விலை உச்சம்! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மழை மற்றும் பனி காரணமாக எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தாலும் விலை வீழ்ச்சி அடைந்தது. தற்போது வரத்து குறைவால் விலை உச்சம் அடைந்துள்ளது.

தஞ்சாவூர்: வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் தஞ்சையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுவையான, புத்துணர்ச்சியூட்டும் பழம் என்றால் அது எலுமிச்சை பழம் தான். கோடை காலத்தில் தினமும் எலுமிச்சம் பழ ஜூசை எடுத்துக் கொள்வதை நாம் பார்த்து இருப்போம். சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சிட்ரஸ் அமிலம் அதிக அளவில் நிறைந்து உள்ளது. இதுதான் இதன் புளிப்பு சுவை மற்றும் பிரெஷ்ஷான வாசனைக்கு காரணமாகும். பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும், பக்கவாதம், இதய நோய்களைத் தடுக்கவும் எலுமிச்சம் பழம் உதவும். எலுமிச்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளை கணிசமாகக் குறைக்கும். எலுமிச்சை சாற்றை தினமும் உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.
எலுமிச்சையில் உள்ள தாவர கலவையான டையோஸ்மின் மற்றும் ஹெஸ்பெரிடின் ஆகியவை உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். தேவையற்ற கொழுப்புகள் கரைவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களை உடையது எலுமிச்சை பழம். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. எல்லா காலங்களிலும் எலுமிச்சை பழம் கிடைக்கிறது. கோடை காலத்தில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு பெரிதும் பயன்படுவதால் மற்ற காலங்களை விட கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக இருக்கும்.
இதனால் அதன் விலையும் அதிகமாக இருக்கும். தஞ்சையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மழை மற்றும் பனி காரணமாக எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தாலும் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் அதன் விலை கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சைக்கு சென்னை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டம் புளியங்குடி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் எலுமிச்சை பழம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி வழக்கமாக 1 டன் அளவில் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும். தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் வரத்து வெகுவாக குறைந்து 500 முதல் 600 கிலோ வரை மட் டுமே கொண்டு வரப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. இதனால் மொத்த கடைகளில் கடந்த மாதம் 2 எலுமிச்சை பழம் ரகத்திற்கு ஏற்றவாறு ரூ.1 முதல் 2 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை உயர்ந்து 1 எலுமிச்சை பழம் ரூ.7 வரை விலை உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.10 வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து எலுமிச்சை பழ வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சைக்கு நாளுக்கு நாள் எலுமிச்சைப்பழத்தின் வரத்து குறைந்து வருவதோடு விலையும் அதிகரித்து வருகிறது அதன்படி கடந்த மாதம் 50 கிலோ கொண்ட ஒரு எலுமிச்சை பழ மூட்டை ரூ.500-க்கு விற்பனையானது. தற்போது அதன் விலை 10 மடங்கு உயர்ந்து ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெயில் காலம் தொடங்கியுள்ளதால் எலுமிச்சை பழத்தின் வரத்து குறைந்திருந்தாலும், அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் எலுமிச்சை பழத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















