மேலும் அறிய
Advertisement
தயாராகும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு: மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையில் திருவாரூர்!
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக அதிவேகமாக பரவி வந்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்து பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருவதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பல தளர்வுகளுடன் வருகிற 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது,
முதலமைச்சரின் சீரான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அளவில் காஷ்மீரில் ஒரு கிராமம் முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல் தமிழகத்தில் காட்டூர் கிராமத்தில் மட்டும் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் காட்டூர் கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களை தவிர மற்ற அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயம் மற்ற கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
கிராமத்திலுள்ள மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இதுவரைக்கும் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் நபர்களுக்கு முதல் தவணையும், மீதமுள்ள 21 ஆயிரம் நபர்களுக்கு இரண்டாம் தவணையும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 லட்சம் மக்கள் உள்ளனர், இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதே போன்று நாளுக்கு நாள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
மூன்றாவது அலை வந்தால் அதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள், அதனை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு பகுதிகளை, குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவுகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். எவ்வளவு குழந்தைகள் வந்தாலும் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்து பொருட்கள், உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
ஜோதிடம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion