செயலிழந்த இரு கால்கள்...... தன்னம்பிக்கையை இழக்காமல் சொந்தக் காலில் நிற்க துடிக்கும் மாற்றுத்திறனாளி பெண்
வீட்டு அருகிலேயே கடை வைக்க ஏதாவது கடன் கிடைக்குமா இல்லை யாரேனும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவுவார்களா என்று ஏங்கி தவித்து அவர் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கண்ணீர் துளிகளே மிச்சமாக இருக்கின்றன.
இரு கால்கள் செயலிழந்தும் தன்னம்பிக்கையை இழக்காமல் சொந்தக் காலில் நிற்க துடிக்கும் மாற்றுத்திறனாளி பெண்.
திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூர் கிராமத்தில் உள்ள செல்வம் தெருவில் வசித்து வந்த சௌந்தரராஜன் விவசாயம் செய்து தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவரது மனைவி விஜய ராணி. இந்த தம்பதியினரின் மகள் ரேவதி பிறந்து ஒன்றரை வயது வரை மற்ற குழந்தைகளை போல இருந்து வந்த ரேவதிக்கு தனது ஒன்றரை வயதில் இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டதில் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்கும் திறனை அவர் இழந்திருக்கிறார். இந்த நிலையில் ரேவதிக்கு மூன்று வயது இருக்கும் போது தந்தை சௌந்தரராஜன் மனநலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி இருக்கிறார். ரேவதி மட்டுமல்லாமல் இந்த தம்பதியினருக்கு ரேணுகா என்கிற மகளும் ஸ்ரீதர் என்கிற மகனும் இருக்கின்றனர். குடும்பத் தலைவர் படுத்த படுக்கையாகி விட்டதால் வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்த அந்த குடும்பம் செய்வதறியாமல் திகைத்து நின்றது. எனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ரேவதியை உரிய முறையில் பராமரிக்க முடியாத தாய் விஜயராணி அவரை சென்னையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளார். அங்கிருந்தபடி பள்ளி படிப்பை முடித்த ரேவதி டிப்ளமோ டிடிபி பயிற்சி முடித்திருக்கிறார். சென்னையில் ஒரு வருடம் மருந்தகத்திலும் பணிபுரிந்து இருக்கிறார். அதேபோன்று தாய் விஜயராணி கஷ்டப்பட்டு விவசாய வேலை செய்து இளைய மகளையும் எம்பிஏ வரை படிக்க வைத்திருக்கிறார்.
அதனையடுத்து 15 வருடங்களுக்கு முன்பு ரேவதி தனது 20 வயதில் சொந்த ஊருக்கு வந்து தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த குடும்பத்தின் வாழ்வாதாரமாக ரேவதியின் தங்கை ரேணுகா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு வரும் சொற்ப வருமானம் ஐந்தாயிரம் ரூபாய் தாய் விஜயராணி வீட்டு வேலை செய்து கொண்டு வரும் சொற்ப வருமானத்திலும் தான் தந்தையின் மருத்துவ செலவு உள்ளிட்ட குடும்ப செலவினங்களை கவனித்து வருகின்றனர். நடக்க முடியாத ரேவதி ஊர்ந்து சென்றோ அல்லது யாரேனும் தூக்கி சென்றோ உதவினால்தான் தனது அன்றாட காரியங்களை செய்யும் நிலையில் இருக்கிறார். ரேவதியின் அண்ணனுக்கு திருமணம் ஆகி அவர் குழந்தை குடும்பம் என பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில் வாழ்வாரதத்திற்கு ரேவதி குடும்பம் மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் இருக்கிறது. இரண்டு கால்கள் செயல் இழந்து நடக்கும் திறனை இழந்தாலும் சொந்த காலில் நின்று உழைக்க வேண்டும் என்று விரும்பும் ரேவதி தனக்கு வீட்டு வாசலில் கடன் வைக்க கடன் கேட்டு அலைந்து வருகிறார். 50 ஆயிரம் ரூபாய் இருந்தால் அதை வைத்து கடை வைத்து விடுவேன் என்று தன்னம்பிக்கையோடு கூறும் ரேவதியிடம் ஏற்கனவே கடை இருந்தால் கடன் தருகிறோம் என்று அதிகாரிகள் கூறியதாக கூறுகிறார். 35 வயதான தனக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் தன் தங்கையை கரை சேர்க்க வேண்டும் வயதான தாய் தந்தையரை பேணி பராமரிக்க வேண்டும் என்பதற்காக தான் சொந்தக்காலில் நின்று உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் உதவுபவர்கள் யாரும் இல்லை என கண்களில் கண்ணீர் தளுத்தளும்ப லேசான குறளில் கூறுகிறார்.
சக குழந்தைகளுக்கு போல துள்ளி விளையாட முடியாமல் கால்களை பிடித்த படி தரையில் ஊர்ந்து படித்து முடித்து இன்று சொந்த காலில் நிற்க வேண்டும் தனக்காக இல்லையென்றாலும் தன் தாய் தந்தையருக்காக வாழ வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்து வருகிறார். இறுதி வாய்ப்பாக தனக்கு வீட்டு அருகிலேயே கடை வைக்க ஏதாவது கடன் கிடைக்குமா இல்லை யாரேனும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவுவார்களா என்று ஏங்கி தவித்து அவர் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் கண்ணீர் துளிகளே மிச்சமாக இருக்கின்றன. இரண்டு கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் உழைத்து சாதித்து காட்ட வேண்டும் தாய் தந்தையரை பேணி பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் ரேவதியை மாற்றுத்திறனாளி என்று சொல்ல முடியவில்லை. மாற்றத்திற்கான திறவுகோல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. நான்கு பேருக்கு நான் உதவியாக இருந்து அவர்களை வாழ்க்கையில் உயர்த்தி விட வேண்டும் என்கிற எண்ணம் அடிப்படையில் என்னுள் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் இந்த உயரிய லட்சியத்தை அடைய முடியாமல் என் கால்களும் கால நேரமும் என்னை முடக்கி போடுவதாக உணர்கிறேன். இருப்பினும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் இலக்கை அடைவேன் என்று அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி என்று அவர் அழுது கொண்டே சொல்வது வேதனையின் உச்சம்.