தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது... தஞ்சாவூர் பெரிய கோயில்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் இன்று சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வரும் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்றது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுத்து வழிபட்டார். அவரது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றினர்.
மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் பிரமாண்டமான கோயில் கட்டி அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூரும், வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியங்களையும் அதிசயங்களை கொண்டுள்ளது என்றால் மிகையில்லை. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை திருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதன்படி சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர்ரவி செயல்அலுவலர் சத்யராஜ், மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவிற்கான கொடிேயற்றம் அடுத்த ஏப்ரல் 13-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. ஏப்ரல் 30-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















