இந்தி திணிப்பு முயற்சி; திருவாரூரில் மத்திய அரசுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இந்தியாவில் மற்ற மொழி பேசும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்க்கும் ஊறுவிளைவிக்கும் இத்தகைய நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது
மத்திய அரசு நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு மாணவ அமைப்பினர் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள், நன்னிலம் கல்லூரி மாணவர்கள், ராஜகோபால சுவாமி கல்லூரி மாணவ, மாணவிகள் என பல அரசு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் அளித்திருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் இந்தியிலோ அல்லது பிராந்திய மொழியிலோதான் கற்பிக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விரும்பினால் வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பாடத் திட்டங்கள் ஒன்று இந்தியிலோ அல்லது பிராந்திய மொழிகளிலோதான் இருக்க வேண்டுமென்ற தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியின் பயன்பாட்டைப் பொறுத்து இந்திய மாநிலங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டு, அதில் முதலாவது பிரிவு மாநிலங்களில் இந்தி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, அந்தமான் நிகோபார் ஆகிய மாநிலங்கள் முதல் பிரிவின் கீழ் வருகின்றன. குஜராத் மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டீகர், டாமன், டையூ, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவை இரண்டாவது பிரிவின் கீழ் வருகின்றன. பிற மாநிலங்கள் அனைத்தும் கடைசி பிரிவாக வகை பிரித்துள்ளது. இந்தக் குழு தற்போது அளித்திருக்கும் அறிக்கையில், 112 பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டுமென்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் இந்தி மொழிபெயர்ப்பை வழங்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள்.
இந்தி படித்தால் மட்டுமே இனி வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவில் உள்ள மற்ற மொழி பேசும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்தி மொழி திணிப்பை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.