திருவாரூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்; அனைத்து ஏற்பாடுகளும் தயார் - டீன் ஜோசப் ராஜ்
காய்ச்சல் வரும்போது பெற்றோர்கள் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசெல்ல வேண்டும் மாறாக மருந்தகங்களில் காண்பித்து மாத்திரை வாங்கி கொடுப்பது அபாயகரமான கட்டத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என்பது அதிகரித்து வருகிறது. அதனை அடுத்து தமிழக சுகாதாரத் துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு என தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இன்புலுயன்சா என்கிற வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருவதாகவும் இதன் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 12 சிறுவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி நாகூர் மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் வைரஸ் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெற வந்த நபர்களை நேரடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு அந்த பிரிவில் அவர்களுக்கான சிகிச்சைகள் மருத்துவர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக அதிக அளவில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். நமது மருத்துவமனையில் இதற்கென்று பெரியவர்களுக்கு தனியாகவும் குழந்தைகளுக்கு தனியாகவும் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற காய்ச்சல் வரும்போது பெற்றோர்கள் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் மாறாக மருந்தகங்களில் காண்பித்து மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது குழந்தைகள் அபாயகரமான கட்டத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எவ்வளவு கடுமையான காய்ச்சலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களும் ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிறியவர்களுக்கு என தனி காய்ச்சல் பிரிவும் பெரியவர்களுக்கு என தனி காய்ச்சல் பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று வெளி நோயாளிகள் பிரிவிலும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு என தனி தனி அமைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முழு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.