திருவாரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - நெல் பயிர்கள் நீரில் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை
குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் 3,000 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கியுள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் மேலும் திண்டுக்கல் நாமக்கல் திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றால் அரசின் சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள இடங்களில் மக்கள் வந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் சிறுவர்கள் ஆற்றில் சென்று குளிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர், குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொரடாச்சேரி, மாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் சாய தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குடவாசல் வலங்கைமான் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் ஒட்டுமொத்தமாக விவசாயம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகின்றன. உடனடியாக வேளாண் துறை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கினால் மட்டுமே செய்த செலவு தொகையாவது கைக்கு கிடைக்க கூடிய நிலை உருவாகும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கக்கூடிய நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக கணக்கெடுக்கும் பணியினை தொடங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.