சுற்றுலாத் தலமாக மாறிவரும் தஞ்சை சமுத்திரம் ஏரி...எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்?
90 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில் எப்போது சமுத்திர ஏறி திறக்கப்படும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சாவூர்: ரூ.9 கோடி மதிப்பில் சுற்றுலாத் தலமாக மாறிவரும் தஞ்சை சமுத்திர ஏரி எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது சமுத்திரம் ஏரி. இந்த ஏரி தஞ்சையில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. பழமையான இந்த சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதனை பார்க்கும் போது தஞ்சை நகரில் தொடங்கி மாரியம்மன்கோவில் வரை பரந்து விரிந்து இருந்தது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும். மராட்டிய அரசு குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுவது உண்டு. இந்த ஏரியில் கடல் போல தண்ணீர் இருந்ததால் சமுத்திரம் ஏரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
நாளடைவில் இந்த ஏரி சுருங்கிக்கொண்டே வந்தது. ஆக்கிரமிப்புகளால் இந்த ஏரியின் அளவு வெகுவாக சுருங்கியது. மேலும் குப்பைக்கூளங்கள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஏரியின் நிலை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. மேலும் இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் இங்கு தங்கி குஞ்சு பொரிக்கும் வகையில் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதனை சுற்றி பார்க்கும் வகையில் படகு சவாரியும் விடப்பட உள்ளது.
மேலும், பொழுதுபோக்கு மீன்பிடி பயிற்சித்தளமும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுவர் விளையாட்டு பூங்கா 40 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் அனைத்தும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சமுத்திர ஏரியில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருட்கள் தஞ்சை பெருமைக்குரிய தலையாட்டி பொம்மை புல் தரைகள் நடைபாதைகள் பணிகள் முடிவடைந்தது.
மேலும் நுழைவாயிலில் ஆர்ச் அமைக்கப்பட்டு அதில் வர்ணம் பூசும் பணிகளும் முடிவடைந்தது. இந்த நிலையில் 90 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில் எப்போது சமுத்திர ஏறி திறக்கப்படும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி எப்போது முடிவடையும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பாக உள்ளது.