கூட பிறந்த பிறப்பே... தூய்மைப்பணியாளர்களை ஆனந்தப்படுத்திய தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர்
நீங்களும் எங்க வீட்டு வாரிசு தான்னு சொல்லி எங்களுக்கு ஆதரவா சொன்னப்ப நான் கும்பிடுற சாமியே எனக்காக வந்திருக்குன்னு கையெடுத்து கும்பிட்டேன்னு சொல்லியிருக்காங்க .

தஞ்சாவூர்: நான் இருக்கிறேன்… உங்களுக்கு தீபாவளிக்கு பிறந்த வீட்டு சீர் வரிசை கொடுக்க என்று தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தீபாவளி பரிசு கொடுத்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனம்.
அப்பா, அம்மா இல்லாம கூட பிறந்தவங்களும் இல்லாம தீபாவளிக்கு பொறந்த வீட்டு சீர் வரிசை யார் குடுப்பான்னு ஏங்கிட்டு இருந்தேன் . குப்பையை எடுக்குறோம்ன்னு எங்களை அருவெறுப்பா பாக்குறவங்க தான் அதிகம் . நாங்க குடிக்க தண்ணீர் கேட்டா கூட குடுக்க மாட்டாங்க . ஆனா என்னையும் உங்க வீட்டு பொண்ணா நினச்சு எங்களை தேடி வந்து புடவை, பணம், பழம், வெற்றிலை பாக்குன்னு தாம்பூலத்துல வைச்சு சீர்வரிசையா செஞ்சதுக்கு நன்றி ஐயா என்று ஆனந்த கண்ணீரில் கையெடுத்து கும்பிட்ட தூய்மை பணியாளர்கள் எதற்காக தெரியுங்களா? 2 லட்ச ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கு இப்படி ஒரு தீபாவளி பரிசை கொடுத்து அவர்களை ஆனந்த கண்ணீர் கடலில் ஆழ்த்தியது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை நிறுவனம்.

தஞ்சை மாநகாரட்சியில் மொத்தம் 12 டிவிஷன் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் இருக்கு . இதுல மொத்தம் 600க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், மேற்பார்வையாளர்கள் வேலை செஞ்சுட்டு வர்றாங்க. தினமும் அதிகாலையில் ஆரம்பிக்கும் இவர்களது தூய்மைப்பணி அந்தி சாயும் வரைக்கும் இருக்கும் . வீடு , தெரு , கடைவீதி , ரோடு , ரோட்டு ஓரத்துல இருக்குற குப்பைத்தொட்டின்னு ஆங்காங்கே இருக்குற குப்பைகளை உடனுக்குடனே சுத்தம் பண்ணிட்டே இருப்பாங்க.
ஆனாலும் இவங்களுக்கு இப்போ இருக்குற விலைவாசிக்கு ஏற்றார் போல் சம்பளம் என்பது போதுமானதாக இல்லை. இந்நிலையில தான் நம்ம ஊரை சுத்தப்படுத்தி நம்மை நோயிலிருந்து பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களை கௌரவிச்சு ஊக்கப்படுத்தி அவர்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடனும்ன்னு நினைச்ச தஞ்சாவூரை சேர்ந்த ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் செய்ததுதான் செம ஹைலைட்.
தூய்மை பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்துக்கே நேரில் சென்று பூ, பழம், புத்தம் புதிய பட்டுப்புடவைன்னு தீபாவளி பரிசா தாம்பூலத்துல வைச்சு குடுத்த அந்த நிமிடம் மகிழ்ச்சி, ஆனந்தம், கண்ணீர் என்று நெகிழ்ச்சியை வார்த்தைகளில் தெரிவிக்க முடியாத நிலைதான். இதை சற்றும் எதிர்பாராத தூய்மை பணியாளர்கள் ஆனந்தத்துல ஷாக் ஆகி நின்றே விட்டனர். இதோட மட்டுமில்லாம அசுத்தத்தை அகற்றினாலும் உங்க மனசு சுத்தம்ன்னு சொல்லி புத்தம் புதிய ரூபாய் தாள்கள் அடங்கிய ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கையில், காண்டிராக்ட்ல தான் தூய்மை பணி வேலை செய்யறோம். பணி நிரந்தம் ஆனவங்க போல் சம்பளம் மற்றும் போனஸ்லாம் கிடையாது. குப்பையை எடுக்குறோம்ன்னு எங்களை அருவெறுப்பா பாக்குறவங்க தான் அதிகம் . நாங்க குடிக்க தண்ணீர் கேட்டா கூட குடுக்க மாட்டாங்க. கிடைக்கிற சொற்ப சம்பளத்துல குடும்பத்தினருக்கு தான் தீபாவளிக்கு புது துணிகள் எடுத்து கொடுப்போம். எங்களுக்கு புது துணிகள் எடுத்துக்க கூட பணமிருக்காது . பழைய, ஓரளவு கிழிஞ்ச ட்ரெஸ் தான் தீபாவளிக்கும் போட்டுப்போம். ஊரே தீபாவளி கொண்டாடுறப்ப எங்களால் அப்படி கொண்டாட முடியலியேன்னு வருத்தப்பட்டு இருந்தேன்.
அப்பா, அம்மா இருந்திருந்தா தீபாவளி சீர்ன்னு வந்திருக்கும். இப்போ அவுங்களும் இல்லை. எனக்கு சீர் வரிசை குடுக்க கூட ஆள் இல்லாம அனாதையா இருக்கேன்னு இரவு நேரத்துல அழாத நாளில்லை. ஆனா இன்னைக்கு எங்களை தேடி வந்து இன்ப அதிர்ச்சியா பூ பழம் புத்தம் புதிய பட்டுப்புடவை பணம்ன்னு சீர்வரிசை மாதிரி தாம்பூலத்துல வைச்சு குடுத்திருக்காங்க. நீங்களும் எங்க வீட்டு வாரிசு தான்னு சொல்லி எங்களுக்கு ஆதரவா சொன்னப்ப நான் கும்பிடுற சாமியே எனக்காக வந்திருக்குன்னு கையெடுத்து கும்பிட்டேன்னு சொல்லியிருக்காங்க .
இது குறித்து ஜோதி அறக்கட்டளையினர் தரப்பில் கூறுகையில், நம்மை சுத்தி இருக்கும் குப்பைகளை அகற்றி நம்மை கவனமா பாத்துக்குற தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமம். அப்படிப்பட்டவங்களை ஊக்கப்படுத்தி உற்சாகமா இருக்க வைச்சு அவுங்களும் தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடனும்ன்னு நினைச்சு ரூ.2 லட்ச ரூபாய் மதிப்பில் இந்த தீபாவளி சீர் வரிசை நிகழ்வை ஏற்பாடு செய்தோம். குழந்தைக்கு தேவை தாலாட்டு – நம்மை கவனிக்கும் தூய்மை தெய்வங்களுக்கு தேவை பாராட்டு என்று தெரிவித்தனர்.





















