குடியரசு தின விழா.. கொடியேற்றிய ஆட்சியர்! சிறப்பாக நடந்த விருதுகள் வழங்கும் விழா..
Republic Day : தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 76வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 76 குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண நிறத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.
பின்னர் காவல்துறையை சேர்ந்த 57 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 8 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதையும் படிங்க: Republic Day 2025 Wishes: குடியரசு தினத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்துங்கள்! வாழ்த்துகள் லிஸ்ட் இங்கே...!
இதையடுத்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 2 பேர், மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பேர், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 3 பேர், தாட்கோ மூலம் பல்வேறு தொழில்களுக்கு நிதி உதவி பெறும் பயனாளிகள் 36 பேர், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகள், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 10 பயனாளிகள் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து மேம்பாலம் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் பள்ளியின் நாட்டுப்புற நடனம், ஒரத்தநாடு சீனிவாசா மெட்ரிக் பள்ளி , தஞ்சாவூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பள்ளம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி, அக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மாணவ, மாணவிகளின் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், எம்எல்ஏ., டி.கே.ஜி. நீலமேகம் மாவட்ட எஸ்.பி., ராஜாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, மேயர் சண்.ராமநாதன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை மேயர் சண்.ராமநாதன் ஏற்றினார். இதில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Republic Day Images: ஜெய்ஹிந்த்! இந்த ஃபோட்டோ அனுப்பி வாழ்த்து சொல்லுங்க! களைகட்டும் குடியரசு தினம்!
நாட்டின் 76வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக நடந்தது. அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்த குடியரசு தினத்தை ஒட்டி காந்தி சிலைக்கு மேயர் சண்.ராமநாதன் மாலை அணிவித்தார். பின்னர் தேசியக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு விருது, கேடயம் மற்றும் சான்றிதழை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் ரம்யா சரவணன், புண்ணியமூர்த்தி, கலையரசன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சேர்மகனி, நகர்நல அலுவலர் நமச்சிவாயம், நகர திட்டமிடுனர் முரளி, உதவி ஆணையர்கள் வாசுதேவன், ரமேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

