36 குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம் மயிலாடுதுறையில் அனுசரிப்பு - மறைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஞ்சலி!
இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர்.
மயிலாடுதுறையில் காவலர்களின் உயிர் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க காவலர் உயிர் நீத்த நினைவு தினத்தில் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பணி நேரத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி இன்று தமிழகத்தில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர்கள் உயிர் நீத்தார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று அக்டோபர் 21 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக மயிலாடுதுறை காவல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, மயிலாடுதுறை மாவட்டத்தில் உயிர்நீத்த 5 காவலர்களுக்காக மலர் வளையம் வைத்து 36 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவலர்கள் மற்றும் உயிர்நீத்த காவலர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உயிர் நீத்த காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதையை ஆயுதப்படை காவலர்கள் செய்தனர். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ராம சேயோன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.