Maruti Jimny: போடு, மாருதி ஜிம்னி வாங்க ஆசையா? ஒரு லட்ச ரூபாய் சலுகை அறிவிப்பு - கூடுதல் விவரங்கள் உள்ளே..!
Maruti Jimny: மாருதி நிறுவனத்தின் ஜிம்னி மாடல் காருக்கு ஒரு லட்ச ரூபாய் சலுகை வழங்கி அந்நிறுவன டீலர்கள் அறிவித்துள்ளனர்.
Maruti Jimny: ஜிம்னி மாடல்களுக்கான விலை குறைப்பு சலுகை மாருதி சுசுகியின் நெக்ஸா டீலர்களிடம், நாடு முழுவதும் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம்:
நடப்பு பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மாருதி சுசுகியின் நெக்ஸா டீலர்கள், சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி, ஜிம்னி மாடல் காரின் தொடக்க நிலை வேரியண்டான Zeta மாறுபாட்டின் மீது ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3000 ஜிம்னி யூனிட்கள் விற்பனையாகி வரும் நிலையில், Zeta வேரியண்டின் தொடக்க விலை ரூ.12.94 லட்சமாக உள்ளது. அதில் தான் தற்போது ஒரு லட்ச ரூபாய் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்னி மாடலுக்கான சலுகை விவரங்கள்:
ஜிம்னி ஜீட்டா மாடல் விலையில் ரூ.50,000 பிளாட் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை மாத இறுதி வரை கிடைக்கும் என்றும், Zeta மாறுபாட்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு விருப்பங்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை & சிறப்பம்சங்கள்:
ஜீட்டா என்பது ஜிம்னி மாடலில் உள்ள தொடக்க நிலை வேரியண்டாகும். இதில் மேனுவல் மாடலின் விலை ரூ.12.74 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் மாடலின் விலை ரூ.13.94 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4WD ஆஃப்-ரோடு கியர் உட்பட, டாப்-ஸ்பெக் ஜிம்னி ஆல்பாவின் அதே 1.5-லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜின் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 BHP @ 6,000 rpm, 134.2 Nm @ 4,000 rpm மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் உள்ள அம்சங்களைப் பொறுத்தவரை, ஜிம்னி ஜீட்டா ஸ்டீல் வீல்கள், 7.0-இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் இஎஸ்பி போன்றவற்றை கொண்டுள்ளது. ஜிம்னி மாடல் வாகனம் மாருதி சுசுகி பிராண்டிற்கு ஒரு முக்கிய தயாரிப்பாக இருந்து வருகிறது. வெயிட்டிங் பீரியட் என்பது இன்றி, பெரும்பாலான விற்பனை நிலையங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. இந்த மாதத்தில் பண்டிகைக்கால தள்ளுபடிகள் வழங்கப்படுவதால், டீலர்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக யூனிட்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்களும், விழாக்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.