மக்களே உஷார் ; பரவுது டெங்கு - அலட்சியம் வேண்டாம் !
டெங்கு பாதிப்பு என்பது ஏடிஸ் கொசுக்கள் கடியால் பரவும் வைரஸ் தொற்று ஆகும், இது கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது,

தஞ்சாவூர்: அலார்ட் மக்களே இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல் என்றால் கை வைத்தியம் பார்க்காதீங்க. டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருக்கு. அதனால அலார்ட்டாக இருங்க. 2025ல் 25,278 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி வரை பரவ வாய்ப்பு இருக்கு என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கோங்க.
2025ம் ஆண்டில், 25,278 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
தமிழகத்தில், 2025ம் ஆண்டில், 25,278 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 10 பேர் இறந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் வரை, டெங்கு பாதிப்பு இருக்கும்' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், அதிக அளவில் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன. இதன் காரணமாக, ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, டெங்கு பாதிப்பு தீவிரமாக இருந்தது. இந்தமாதங்களில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், தினசரி, 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, டெங்கு பாதிப்பு தற்போது குறைந்து, தினசரி பாதிப்பாக, 100க்கு கீழ் பதிவாகி வருகிறது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு, 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை, பாதியாக குறைந்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,278 மட்டுமே. கடந்த ஆண்டை விட இந்த பாதிப்பு பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதிகளில்தான் அதிக பாதிப்பு
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஆண்டு, 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மழைக் காலங்களில், டெங்குவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதாவது ஜூலை மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை குறிப்பாக, கிராமங்களை விட, நகர்ப்பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருந்தது. டெங்கு உறுதி செய்யப்படும் பகுதிகளில், உடனடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பாதிப்பு மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் பயனாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்தது. இந்த ஆண்டில், 25,278 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 6248 பேர் டெங்குவால் பாதிப்பு
அதிகபட்சமாக, சென்னையில், 6,284; திருவள்ளூரில் 2,094; கோவையில், 1,882; கடலுாரில், 1,525 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மற்ற மாவட்டங்களில், 1,000க்கும் கீழ் தான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கரூரில், 91 பேர், நீலகிரியில் 103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 100க்கும் கீழ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 113 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். டெங்கு பரவலின் தீவிரம் குறைந்திருந்தாலும், வரும் ஜன., பிப்., மாதங்களிலும் பாதிப்பு இருக்கும். அதன்பின்னரே குறைய துவங்கும். எனவே, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல், மக்கள் தாங்களே ஏதாவது மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்று எண்ணாமல் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படி ஏற்படுகிறது டெங்கு
டெங்கு பாதிப்பு என்பது ஏடிஸ் கொசுக்கள் கடியால் பரவும் வைரஸ் தொற்று ஆகும், இது கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, மேலும் சிலருக்கு தீவிரமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். இது Aedes aegypti மற்றும் Aedes albopictus போன்ற கொசுக்கள் மூலம் பரவுகிறது, குறிப்பாக பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது.
சிலருக்கு, இது வயிற்று வலி, இரத்தம் வடிதல் (ஈறுகள், மூக்கு), கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகளுடன் தீவிரமடையலாம், இதற்கு மருத்துவமனையில் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. டெங்கு காய்ச்சல் ஒரு கொசுவால் ஒருவருக்குத் தொற்றிய பின், அந்த கொசு மற்றொருவரை கடிக்கும்போது வைரஸ் பரவுகிறது. ஏற்கனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் தொற்று ஏற்படும்போது தீவிரமான டெங்கு வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. எனவே மக்களே அலார்ட்டாக இருங்க.





















