PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

PM Modi Iran: பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண, ஈரானுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுக்கு போன் போட்ட பிரதமர் மோடி..
வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். அப்போது அதிகரித்து வரும் வன்முறை, பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் உட்கட்டமைப்பு சேதம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது சமூக வலைதள பதவில், ”இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகள் அதன் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவின் கூட்டு ராணுவ தாக்குதலுக்கு ஈரான் பதிலளித்து வருவதை தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மற்றும் ஈரான் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மோடி பேசியது என்ன?
ஈரான் அதிபர் உடனான பேச்சுவார்த்தையில், “பிராந்தியத்தில் நிலவும் கடுமையான நிலைமை குறித்து ஈரானிய அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் உரையாடினேன். பதற்றங்கள் அதிகரிப்பது மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்படுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன். தற்போதைய சூழல் மேலும் மோசமடைவதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ராஜதந்திர தீர்வுகளுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினேன்” என பிரதமர் மோடி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். வளைகுடா நாடுகளில் நிலவும் மோதல்கள் ஏற்கனவே கப்பல் பாதைகள் மற்றும் எண்ணெய் விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது, இது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறையை தூண்டிவிட்டுள்ளது.
Had a conversation with Iranian President, Dr. Masoud Pezeshkian, to discuss the serious situation in the region.
— Narendra Modi (@narendramodi) March 12, 2026
Expressed deep concern over the escalation of tensions and the loss of civilian lives as well as damage to civilian infrastructure.
The safety and security of…
கப்பல்களுக்கான கதவுகள் திறக்கப்படுமா?
உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடியுடன் கூடிய வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்காக இந்தியா ஈரானுடன் தொடர்பில் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய கொடி பறக்கும் கப்பல்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படுவதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது. இது எரிபொருள் விநியோக இடையூறுகள் குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகளுடன் 24 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் தற்போது ஜலசந்தியின் மேற்கே இருப்பதாகவும், இந்தியக் குழுவினருடன் மேலும் நான்கு கப்பல்கள் மூலோபாய நீர்வழிப்பாதையின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரச்னை முடிவடையுமா?
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுமார் 20 சதவிகித போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார், ஆனால் நாட்டில் தற்போது போதுமான எல்பிஜி விநியோகம் உள்ளது என உறுதியளித்துள்ளார். , எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதில் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் நாடு நெருக்கடிகளைச் சமாளித்ததாகவும், தற்போதைய சூழ்நிலையை ஒற்றுமையுடனும் பொறுப்புடனும் கையாளும் என்றும் கூறி, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
























