பள்ளிக்கு வந்த பின்னர் விடுமுறை அளித்து பயன் என்ன ? - மயிலாடுதுறையில் பெற்றோர்கள் அதிருப்தி
விடுமுறை குறித்து காலை 8 மணிக்கு மேல்தான் அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புற மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர்
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை முடிவுற்ற நிலையிலும் டெல்டா மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்று முன் தினம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. காலை முதலே மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கிய திடீர் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை லேசான மழையாக தொடங்கி அவ்வப்போது பலத்த மழையாக பெய்து வருகிறது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வழக்கம்போல விடுமுறை அளிப்பதில் மாவட்ட ஆட்சியர் காலதாமதம் செய்வதாக பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மழை காலத்தின் போதும் பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு சென்ற பின்னரே விடுமுறை அளித்து வந்த ஆட்சியர், தற்போது பெய்து வரும் கனமழையில் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் மழையில் நனைந்து பள்ளி வந்த பின்னரே விடுமுறை அளிப்பது பெற்றோர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
விடுமுறை குறித்து காலை 8 மணிக்கு மேல்தான் அறிவிப்பு வெளியாகிறது. என்றும், இதனால் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் காலையை புறப்பட்டு மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர். அதன் பின்னர் வெளியாகும் விடுமுறை அறிவிப்பால் மீண்டும் மழையில் நனைந்து பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. உள்ளூர் மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரிந்து பாதி வழியில் வீடு திரும்புகின்றனர். அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில் முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் பேருந்தில் காலையிலேயே கொட்டும் மழையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சிரமத்தைக் தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 8.10 மணிக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டார். பின்னர் 8.30 மணி அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்ற அறிவிப்பு தாமதமாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு பின்னர் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் உண்டு என்ற அறிவிப்பு தாமதமாக வெளிடப்பட்டதால் மாணவ மாணவிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று பள்ளிகளின் வாயிலில் பள்ளி நிர்வாகத்தினர் போர்டில் எழுதி மாணவர்களின் பார்வைக்கு வைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெளிவான அறிவிப்பையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளிட்டு மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.