நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா!: மனதை மயக்கும் இசையை தரும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்
நலம் தானா... உடலும் உள்ளமும் நலம்தானா..! இந்த வார்த்தைகளை நாதஸ்வரத்தில் கேட்கும் போது உள்ளமும், மனமும் மயங்கியது அல்லவா. அப்படி பெருமை வாய்ந்த நாதஸ்வரம்தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்.
தஞ்சாவூர்: நலம் தானா... உடலும் உள்ளமும் நலம்தானா..! இந்த வார்த்தைகளை நாதஸ்வரத்தில் கேட்கும் போது உள்ளமும், மனமும் மயங்கியது அல்லவா. அப்படி பெருமை வாய்ந்த நாதஸ்வரம்தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம்.
நாதஸ்வர இசை கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும்
இசை பிடிக்கலைன்னு சொல்ற யாராவது இருப்பாங்களா? பிடிக்காதவங்களை கூட பிடிக்க செய்து விடும் இசை. தினம், தினம் வெவ்வேறு இசைகளை கேட்போம். எத்தனையோ இசை கருவிகளின் இசை மனதை கொள்ளை கொள்ளும். இதில் முக்கியமாக நாதஸ்வர இசை கேட்டால் துள்ளாத மனமும் துள்ளும்தானே. இது முழுக்க முழுக்க தமிழர்களின் கண்டுபிடிப்பு.
சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே இசை பாடும் ஒரு மிகவும் பழமையான பொக்கிஷமான இசைக்கருவியாக நாதஸ்வரம் விளங்குகிறது. ஒரு சினிமா பாடலின் பல விதமான இசைகள் கலந்து இருக்கும். அதில் திடீரென நாதஸ்வர இசை ஒலிக்கும்போது மனம் குதூலிக்கும். கல்யாணம், இசை நிகழ்ச்சி, கோயில் போன்ற பல இடங்களில் தனித்துவமான இசையாக நாதஸ்வரம் ஒலிக்கிறது. இது எங்கு தயாரிக்கப்படுகிறது, எப்படி உருவாகிறது தெரிந்து கொள்வோம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாதஸ்வரத்திற்கு பேர் போன நரசிங்கம்பேட்டையில்தான் இவை தயாரிக்கப்பட்டுகிறது.
ஸ்ரீரங்கம் சென்று கற்றுக் கொண்ட நுட்பங்கள்
சக்கரவர்த்தி என்று இசை உலகத்தினர் கொண்டாடும் ராஜரத்தினம் பிள்ளைக்கு திமிரி என்ற ஆரம்பகால நாகஸ்வரத்தில் விருப்பத்திற்கு ஏற்ற இசையை மிக துல்லியமாக வாசிக்க இயலவில்லை என்பது தீராத வருத்தமாக இருந்தது. திமிரியில் பிரதி மத்தியம ஸ்வரம் மட்டுமே வாசிக்க முடியும். இதனால் நாதஸ்வரத்தை வடிவமைக்கும் நரசிங்கம்பேட்டையை சேர்ந்த ரங்கநாத ஆச்சாரியிடம் ராஜரத்தினம் தன்னுடைய கவலையை எடுத்து கூற, அவர் ஸ்ரீரங்கம் அருகே அமைந்திருக்கும் திருவானைக்காவலுக்கு சென்றார். அங்கே சில நுட்பங்களை கற்ற அவர் 6 நாதஸ்வரங்களை உருவாக்கினார். அதுவே பின்னாளில் பாரி நாதஸ்வரமாக இன்று நாம் பார்க்கும் நாதஸ்வரமாக மாறியது. இதனால் தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என பெயர் வந்தது.
ஒரு கட்டையிலிருந்து 6 கட்டை வரை
இதன் சிறப்பு கலைஞனின் விருப்பத்திற்கு ஏற்ப நாதம் இசைக்க முடியும் என்பது தான். நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடிப்பில் உருவான தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் ”நலம் தானா” பாடல் இதற்கு சிறந்த உதாரணம். ஒரு கட்டையிலிருந்து 6 கட்டை வரையிலான நாதஸ்வரம் உள்ளது. தமிழ்நாட்டில் 99 சதவீதம் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு இரண்டு இரண்டரை கட்டை நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். நாதஸ்வரம் முதலில் குழல் பாகமும் பிறகு அணசு பாகமும் உருவாக்கப்படும். மொத்தமாக நாதஸ்வரத்தில் 12 துளைகள் இருக்கின்றன.
சீவாளி தயாரிக்கும் முறை
மேலே இருக்கும் 7 துளைகள் ஸ்வரங்கள், பக்கவாட்டில் உள்ள இதர ஐந்தும் பக்க ஸ்வரங்கள் ஆகும். குழலின் நடுபாகத்தில் துளையிடுவது தான் மிகவும் கடினமானது. மிகவும் நுணுக்கமான முறையில் மனநிலையை சரியாக வைத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வீணாகிவிடும். நாதஸ்வரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது.
நாணலை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து காயப்போட்டு ஒரு வருடம் ஆனதும் நெல் வேகவைக்கும் போது கூட வேக வைத்து, நீராகாரத்தில் ஊறவைத்து மிருதுவாக்கி சுதிக்கு ஏற்ப அதை வெட்டி சீவாளி தயாரிக்கப்படுகிறது. சீவாளியையும் நாதஸ்வரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும். ஒரு நாதஸ்வரம் செய்வதற்கு 2 நாட்கள் ஆகும். இத்தகைய பெருமை வாய்ந்த நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு 8 வருட போராட்டத்திற்கு பின் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.