TN Govt School : ”முத்துப்பேட்டை அரசு பள்ளியில் சட்டமன்ற தேர்தல்” முதல்வர், அமைச்சர்களாக மாணவர்களே பதவியேற்று அசத்தல்..!
உண்மையான தேர்தல் போன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்தலை கண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகம் அடைந்தனர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு ப்பள்ளியில் நடைப்பெற்ற பள்ளிச் சட்டமன்றத் தேர்தலில் மாணவர்களே முதல்வர், அமைச்சர்களாக பதவியேற்று அசத்தியுள்ளனர்.
அரசியல் புரிதல் ஏற்படுத்தும் அரசு பள்ளி
அரசு பள்ளிகளில் சிறப்பான கல்வியை வழங்கி முன்மாதிரி மாணவர்களை உருவாக்க பல அரசு பள்ளி ஆசிரியர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருவதுடன் அந்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களால் பாராட்டப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் நடைமுறையினை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தேர்தல் பற்றிய விழிப்புணர்வுகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்லவும் அரசியல் ஜனநாயகத்தினை மாணவர் பருவத்திலேயே நேர்மையோடு கற்றல் அறிவினை ஊக்குவிக்கும் விதமாகவும் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்து சிறப்புடன் செய்து கட்டியது மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.
பள்ளி மாணவர்கள் இடையே சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 11ந்தேதி பள்ளி அளவில் மாணவர்களிடையே சட்டமன்ற தேர்தல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேர்தலில் 25க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எட்டு விதமான பதவிகளுக்கு போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் போன்று வாக்கு சீட்டு முறையில் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற இந்த தேர்தலில் மாணவர்கள் மிக ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். முன்னதாக பள்ளி மாணவர் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி 09.07.2024 அன்று அறிவிக்கப்பட்டது 10.07.2024 அன்று வேட்பு மனு தாக்கலும் அன்றைய தினமே வேட்புமனு பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 11.07.2024 தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமே வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் போட்டியிட்ட மாணவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வேட்பு மனு வாங்கி அதனை அந்த வேட்பாளரே முன்மொழிபவர் வழிமொழிபவர் உள்ளிட்ட போட்டு முழுவதும் பூர்த்தி செய்து தாக்கல் செய்து போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலராக ஆசிரியர் முருகேசன், வாக்கு சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் சாந்தி, ஷெரின், சுந்தரமூர்த்தி, ராஜகுமாரன் ஆகியோர் பணியாற்றினர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியை உதயபானு கவர்னராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். இத்தேர்தலில் முதலமைச்சராக மாணவி சுபஸ்ரீயும், கல்வி அமைச்சராக மாணவி ஜனனியும், விளையாட்டு துறை அமைச்சராக மாணவன் ஹரீஷ்யும், உணவுத்துறை அமைச்சராக மாணவன் பிரதீப்பும், சுகாதாரத்துறை அமைச்சராக மாணவி வீரதர்ஷினியும், தோட்டக்கலை துறை அமைச்சராக மாணவன் ருத்ரன்னும், எதிர்க்கட்சி தலைவராக மாணவி நிகாஷினியும், பள்ளி நிர்வாக துறை அமைச்சராக மாணவி கார்திகாவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிகழ்வில் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகம்
இந்தநிலையில் உண்மையான தேர்தல் போன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந்த மாதிரி தேர்தலை கண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது.