ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் விடுதலை
ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

தஞ்சாவூர்: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்களை தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து அமைச்சர், எம்பி, எம்எல்ஏ ஆகியோரை விடுவித்து, தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் கடந்த 20.1.2017 அ்ன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் மற்றும் அதையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பகன், கும்பகோணம் நகராட்சித் துணைத் தலைவர் சுப.தமிழககன் மற்றும் கே.என்.செல்வராஜ் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ள தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு விசாரணை கடந்த ஜன.8-ம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், எம்.பி. சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் நகராட்சித் துணைத் தலைவர் சுப.தமிழழகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.செல்வராஜ் ஏற்கெனவே வழக்கு நடைபெற்ற காலத்தில் இறந்துவிட்டார்.
அப்போது நீதிபதி கனிமொழி, இந்த வழக்கு தொடர்பாக உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இவ்வழக்கிலிரு்ந்து குற்றம் சாட்டப்பட்டவ்ர்களை விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திமுக மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஜெயச்சந்திரன், ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.





















