குடிமகன்கள் குவிவதால் ஒரே இடத்தில் திறக்கப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகள்...!
மயிலாடுதுறையில் பழைய டாஸ்மாக் கடை அருகில் மற்றோரு டாஸ்மாக் கடையை புதிதாக திறக்கப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை நகரில் உள்ள கூறைநாடு பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏற்கெனவே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அதே பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மயிலாடுதுறை நகரில் உள்ள கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகே பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் நாள்தோறும் ஏராளமானோர் மது வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த டாஸ்மார்க் கடை ஆனது பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளதால் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் இந்த டாஸ்மாக் மதுக்கடையில் நாள்தோறும் கூட்டம் அதிகமாக வருவதை கண்ட டாஸ்மாக் நிர்வாகத்தினர், கடைக்கு அருகில் மற்றொரு டாஸ்மாக் கடையினை புதியதாக திறந்துள்ளனர்.
ஒரே இடத்தில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அப்பகுதியில் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதாகவும், இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாவதாகவும் கூறும் பொதுமக்கள், அப்பகுதியில் இருந்த இந்த இரண்டு கடைகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மயிலாடுதுறை நகர பொதுமக்கள், அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு கஜானாவில் பணம் இல்லை என்பதை காட்டிய அதே வேளையில், கஜானாவை நிரப்பும் செயலாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அதிகரித்து அதன்மூலம் வருவாய் ஈட்ட முடிவெடுத்துள்ளதுள்ளது போன்று இந்த புதிய டாஸ்மாக் கடையை அமைத்திருப்பது தோன்றுவதாக கூறினர்.
படிப்படியாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை குறைக்கும் என்று எண்ணிய நிலையில் அதனை அதிகரிப்பது என்பது மிகவும் வருத்தத்திற்கு கண்டனத்திற்கும் உரியது என்றும், மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த பேரிடர் காலத்தில் தொற்றை அதிகரிக்கும் விதமாக பல மதுபான கடைகள் செயல்படுகிறது என்றும் இந்த சூழலில் மதுபான கடைகளை மூடாமல் தொற்றை அதிகரிக்கும் விதமாக கடைகளை திறந்து மட்டுமல்லாமல் புதியதாக மேலும் பல கடைகளை அரசு வருவாய் ஈட்டுவதற்கான திறப்பதை நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை திமுக அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் தாங்கள் வாக்களித்ததாகவும், ஆனால் தங்கள் நம்பிக்கையை வீணடிக்கும் விதமாக தற்போது எங்கள் பகுதியில் மற்றோரு அரசு டாஸ்மாக் மதுக்கடையை திறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள கடையை அகற்ற நாங்கள் போராடி வரும் நிலையில் இதே இடத்தில் மற்றொரு கடையை திறந்து மதுவிற்பனை நடைபெறுவது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும். இந்த இரண்டு மதுக்கடைகளையும் உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் எங்கள் பகுதி பெண்கள் திரண்டு பெரும் போராட்டத்தை கையில் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.