மயிலாடுதுறையில் அவ்வப்போது உள்வாங்கும் சாலைகள் - தீர்வுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்
மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பள்ளம் எற்பட்டு சரிசெய்த நிலையில் மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் கடந்த 2007 -ம் ஆண்டு முதல் பாதாளசாக்கடை திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் இந்த பாதாளசாக்கடை பராமரிப்பு பணிகளை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பராமரித்து வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் தரமற்ற முறையில் பாதாளசாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் இணைப்புகளுக்கான இத்திட்டத்தில் அளவுக்கதிகமாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்ந சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு குழாய் செல்லும் சாலைகளில் பெரிய பள்ளம் ஏற்பட்டுவது தொடர்ந்து வருகிறது. கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, நகராட்சி அலுவலகம் எதிரே, தரங்கம்பாடி சாலை, தைக்கால்தெரு, கொத்தத்தெரு, சுமைதாங்கி, திருவாரூர் சாலை என்று 25 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுவதும் அதனை தற்காலிகமாக சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் பாதாளசாக்கடை பிரச்சனையால் மயிலாடுதுறையில் உள்ள 36 வார்டுகளிலும் கழிவுநீர் பல்வேறு சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாதாளசாக்கடை கழிவுநீர் காவிரிஆறு, வாய்கால்கள் குளங்களில் கலந்து நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி குடிநீரிலும் பாதாளசாக்கடைநீர் கலந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வுகான பல்வேறு வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தும் இதுநாள் வரை பாதாள சாக்கடை பிரச்சனை சரிசெய்யப்படவில்லை. இந்த சூழலில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு பாதாளசாக்கடை பிரச்சனை குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்வு செய்து பாதாளசாக்கடை திட்டம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், 100 கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளசாக்கடை கொண்டு வருவதற்கு அரசுக்கு சட்டமன்ற மதீப்பீட்டுகுழு பரிந்துரைக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
India Corona Spike: இந்தியாவில் மேலும் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 40 பேர் உயிரிழப்பு!
ஆனால், பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் கச்சேரிரோடு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை உள்வாங்கி 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல்துறையினர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி பேரிகார்டு வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். நகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்து வருகின்றனர். மயிலாடுதுறை நகரில் கடந்த சில ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாளசாக்கடையை தமிழ்நாடு அரசு மறுசீரமைப்பு செய்துதர வேண்டும் என்பதே மயிலாடுதுறை மக்களின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்