திருக்கடையூரில் மீண்டும் ரேக்ளா ரேஸ் - கிராம மக்கள் முடிவு
திருக்கடையூரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காணும் பொங்கல் அன்று மீண்டும் எல்கை பந்தயம் சிறப்பாக நடத்துவதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 8 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார். பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தடைப்பட்டு இருந்தது. தொடர்ந்து வருகின்ற 2023 -ம் ஆண்டு ஜனவரி 17 -ம் தேதி காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு அமிர்த விஜயகுமார் தலைமையில் 30 பேர் கொண்ட விழா குழுவினர் நியமிக்கப்பட்டனர். காணும் பொங்கல் அன்று குதிரை மாடுகளுக்கான எல்கை பந்தயம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் இன்றி இப்போட்டியில் பங்கேற்கும் பல் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறையில் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி மூலம் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் 652 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 20.99 கோடி ரூபாயும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 7.69 கோடி ரூபாய் பெருங்கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னிர்செல்வம், ஆகியோர் கடன் உதவிகளை வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 6592 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு கடந்த 2021 - 2022-ஆம் நிதியாண்டியில் 301 கோடி ரூபாய் அளவிலான கடன் உதவி வழங்கப்பட்டது. நடப்பு 2022-2023 நிதியாண்டியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிட 500 கோடி ரூபாய் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2022 நவம்பர் மாதம் முடிய 266.85 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.