பிரியாணி சாப்பிட கூண்டோடு நகராட்சியை காலி செய்த அதிகாரிகள் - சீர்காழி மக்கள் அதிர்ச்சி
சந்தானம், சிங்கமுத்து பட காமெடி போல பஷீர் பாய் வீட்டு கல்யாணமா கிளம்பு, கிளம்பு என்ற பாணியில் பாய் வீட்டு பிரியாணி சாப்பிட சென்ற நகராட்சி ஊழியர்களால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24 வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 24 வார்டுகளிலும் சுமார் 50,000 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று திங்கட்கிழமை அலுவலக திறக்கப்பட்ட நிலையில் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுமார் 30 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் காலையிலிருந்து மதியம் 12 மணி வரை பணியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி மேலாளர் காதர் கான் அவர்களின் சகோதரி திருமணம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அந்த திருமண நிகழ்வில் சென்று பிரியாணி சாப்பிடுவதற்காக அதிகாரிகள் அனைவரும் இரண்டு வேன்களில் புறப்பட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் நகராட்சி அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை ஊழியர்கள் இல்லாத வெறிச்சோடி காணப்பட்டது. ஊழியர்கள் இருக்கும் இருக்கைகளும் ஆள் அரவம் அற்று காலியாக இருந்துள்ளது.
இதனால் நேற்று வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, சொத்து வரி, குடிநீர் வரி, கட்டிட பிளான் அனுமதி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க வந்த பொதுமக்களும் உணவருந்த சென்ற அதிகாரிகள் திரும்புவார்கள் என மதியம் முதல் மாலை வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். பாய் வீட்டு பிரியாணி என்பதால் தனி சுவை உண்டு என்வதால் வேலையை விட பிரியாணியை முக்கிய என்ற ஆசையில் அதிகாரிகள் முன்கூட்டியே அலுவலகத்தை திறந்து போட்டுவிட்டு கிளம்பி சென்றுள்ளதாக பொதுமக்கள் பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மேலும், சீர்காழி நகராட்சி குறைகள் குறித்து நாளுக்கு நாள் செய்தித்தாள், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வந்த வண்ணம் உள்ள நிலையில் படத்தில் சந்தானம், சிங்கமுத்து காமெடி போல வாணியம்பாடி பஷீர் பாய் வீட்டு கல்யாணம் போவனும் ஒருவாரமா சொல்லிட்டு இருக்கன் நீ பாட்டுக்கு வேலை போனா என்னா அர்த்தம். அப்படியே பட்ட வேலை வேணாம். பிரியாணி சாப்பிட வா.. என்ற காமெடி போல நடந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த சில காலமாக நகராட்சி குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து அது தொடர்பாக செய்திகள் வெளியாகும் நிலையில், தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நாளை முதல் தான் நான் பணியில் இணைய உள்ளேன். நான் பணியை ஏற்றவுடன் இது குறித்து விசாரணை செய்து என்ன நடந்தது என முழுமையாக கூற முடியும். இருந்த போதிலும், மதிய உணவு இடைவேளையில் நான்கு பேர் மட்டுமே வெளியில் சென்றுள்ளதாகவும், மேலும் நான்கு பணியாளர்கள் பணியில் இருந்ததாக சொல்கின்றனர். நாளை விசாரணைக்கு பிறகே என்ன நடந்தது என தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.