மயிலாடுதுறை மாவட்டத்தில் தக்காளி காய்ச்சலா? - பெற்றோர்கள் பீதி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் எனப்படும், கை, பாதம், வாய் நோய் குழந்தைகளுக்கு தீவிரமாக பரவி வருகிறது.
கை, பாதம், வாய் நோய் என்பதைதான் கேரளாவில் தக்காளி காய்ச்சல் என அழைப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கை, பாதம், வாய் நோய் ( HFMD) (HAND FOOT MOUTH DISEASE) குறிப்பாக காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். இதுவே என்டிரோ வைரஸ் 71 என்ற வைரஸால் ஏற்படும்போது பாதிப்பு தீவிரமாகவுள்ளது. இந்த வைரஸ்கள் என்டிரோவைரஸ் வகையை சேர்ந்தவை. இது மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்தும். தொற்று பாதிக்கப்பட்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் "தக்காளி காய்ச்சல் மிதமாக பரவக்கூடிய நோய். சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மலம் ஆகியவற்றின் மூலம் பரவலாம்.
தொற்று பாதிக்கப்பட்ட முதல் வாரத்தில் நோய் அதிகமாக பரவக்கூடிய ஆபத்து உள்ளது. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதன் மூலம் இந்த நோயை தடுக்கலாம். குறிப்பாக குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறைக்கு சென்ற பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
எனவே இதன் அறிகுறிகளான காய்ச்சல், வலி, வாய்ப்புண் போன்ற நோய்களுக்கான சிகிச்சையே வழங்கப்படும். இருப்பினும் இது கொரோனா போன்றோ, நிப்பா வைரஸ் போன்றோ அச்சப்படக்கூடிய பாதிப்பு கிடையாது என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வைத்துள்ளனர். மற்றபடி தக்காளிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த காய்ச்சலில் வரக்கூடிய கொப்புளங்கள் சிவப்பாக இருப்பதால் இதனை தக்காளி காய்ச்சல் என்கின்றனர். 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு என்டிரோ வைரஸ் 71 ஆல் உருவாகும் கை, பாதம், வாய் நோய் ஆசிய கண்டத்தில் பல்வேறு நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் தாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு மலேசியாவில் இந்த நோய் 76 ஆயிரம் குழந்தைகளை பாதித்தது. இந்தியாவிலும் இந்த நோய் அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த காக்சாக்கி வைரஸான கை, பாதம், வாய் நோய் மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகளிடையே வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இது சின்ன அம்மை போன்று காணப்படுவதால் பலரும் சின்ன அம்மை என கூறி அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த நோய் தாக்குவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் குழந்தைகளின் நலன் கருதி விடுமுறை அளித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக ஆங்காங்கே தொற்று பரவியுள்ள நிலையில், பெரும்பாலும் பெற்றோர்கள் இது சின்னம்மை என்றே கருதி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கின்றனர். எனவே சுகாதாரத் துறையின் கவனத்திற்கு தொற்று குறித்த செய்தி சென்றதா என்று தெரியவில்லை. இது பற்றி எந்த அறிவிப்பும் சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை.
இந்த நோய் தாக்குதலால் பெரிய பாதிப்பு இல்லை என்ற போதிலும் இது ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு எளிதில் பரவும் என்பதால் மாவட்ட சுகாதாரத்துறை இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, மாவட்டத்தில் செயல்படும் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.