(Source: ECI/ABP News/ABP Majha)
மண்வெட்டி, கடப்பாரையுடன் கிராம சபை கூட்டத்திற்கு வந்த பெண்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் வராததால் 100 நாள் வேலைக்குச் சென்ற பெண்களை கொண்டு கூட்டத்தை நடத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் வராததால் 100 நாள் வேலைக்குச் சென்ற பெண்களை கொண்டு கூட்டத்தை நடத்திய ஊராட்சி நிர்வாகம், ஊராட்சித் துணைத் தலைவர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காளி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரும்பாலான ஊராட்சி சார்ந்த பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை பொதுமக்கள் கூட்டத்திற்கு யாரும் வராததால் ஊராட்சி நிர்வாகத்தினர் 100 நாள் பணிக்கு சென்ற பெண்களை அழைத்து வந்து கூட்டத்தில் பங்கேற்க செய்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உமாபதியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் வந்த அதிகாரிகள் இளைஞர்களை சமாதானம் செய்து, அங்குள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் வளாகத்தில் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக 12.30 மணிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ஸ்டாலின் தலைமையில் கூட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் பணிக்கு செல்லக்கூடிய பெண்கள் தங்களுக்கு தாமதம் ஆகிவிட்டதாக புலம்பத் தொடங்கினர். மேலும், தங்களுக்கு கிராம சபை கூட்டம் நடப்பதே தெரியாது என்றும், ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கியதை கொண்டாடுவதாக கூறி தங்களை அழைத்து வந்துள்ளார்கள் என குற்றம் சாட்டினர். பின்னர் தாமதமாக தொடங்கப்பட்ட கிராம சபை கூட்டம் ஆனது பத்து நிமிடத்திலேயே முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் காபி மற்றும் பிஸ்கட்களை கொடுத்து சமாதானம் செய்து அனுப்பிய நிலையில் இது மட்டுமே மிச்சம் என்று வசை பாடியபடி 100 நாள் பணிக்கு பெண்கள் அவர்கள் கொண்டுவந்த மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றனர். இந்த பிரச்னை காரணமாக ஏற்பட்ட சலசலப்பினால் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது.
கிராமச் சபைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10 சதவீதம் வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம். மக்கள் தொகை 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் பேரும் 50, மக்கள் தொகை 501 – 3,001 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 100 ஆகும். மக்கள் தொகை 3001 – 10,000 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 200 ஆகும். மக்கள் தொகை 10,000க்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 300 ஆகும். கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.