மயிலாடுதுறை : குறைத்து வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் பழையபடி மாற்றப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளுக்கு குறைத்து வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவு மீண்டும் பழையபடி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீர்காழியில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
![மயிலாடுதுறை : குறைத்து வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் பழையபடி மாற்றப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல் kerosene quantity will be increased to poor says minister chakkarapani மயிலாடுதுறை : குறைத்து வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் அளவை மீண்டும் பழையபடி மாற்றப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/18/0856717f7acdae1ab241ec2240a1de2e_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு தமிழ்நாடு முழுவதும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களை மாவட்டங்கள்தோறும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து பல்வேறு துறை அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் அவரவர் துறை சார்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நல அமைச்சர் மெய்யநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூர் நவீன அரிசி ஆலையில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். நவீன அரிசி ஆலை வளாகத்தில் கடந்த 3 ஆண்டுளுக்கு முன் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டில் இல்லாமல் உள்ள நவீன நெல் சேமிப்பு கலன்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆராய்ந்தார். தொடர்ந்து அரிசி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ”விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வரும்போது காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது என்றும், விவசாயிகள் எடுத்து வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டும் எனவும், எருக்கூர் நவீன அரிசி ஆலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக துவக்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் இதுவரையில் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய முறையில் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், ”எருக்கூர் நவீன அரிசி ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியேறுவதால் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளில் படிவதுடன் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்துவதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கரித்துகள் வெளியே செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தமிழ்நாட்டு முதல்வர் சமீபத்தில் ஏழு திட்டங்களுக்காக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது உணவு பொருள் வழங்கல் துறைக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளார். இதன்மூலம் நியாயவிலை கடைகளில் நுகர்வோர்களுக்கு தரமான அரிசி சரியான எடையில் வழங்கப்படும் என்றும், முதல்வர் அறிவித்த 14 வகை பொருட்கள் படிப்படியாக அனைத்து நியாயவிலை கடைகளிலும் இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படும் எனவும், கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளுக்கு குறைத்து வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவு மீண்டும் பழையபடி முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)