இன்னைக்கு ஜாங்கிரி... நாளைக்கும் இப்படின்னா நாங்க ஆகிடுவோம் ஆங்கிரி: தஞ்சையில் நூதன விழிப்புணர்வு
இப்படி இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும் லட்டு ,ஜாங்கிரி உள்ளிட்ட இனிப்புகளை கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அனுப்பினர்

தஞ்சாவூர்: ஆங்கிலப் புத்தாண்டுங்கிறதுனால ஹெல்மெட் போடாம இருந்தாலும் இன்னைக்கு உங்களுக்கு ஜாங்கிரி... நாளைக்கும் இப்படியே வந்தா நாங்க ஆகிடுவோம் ஆங்கிரி என்று பஞ்ச் டயலாக்கோடு, ஹெல்மேட் அணிவதன் அவசியத்தை வலியுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் தஞ்சாவூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன். இந்த விழிப்புணர்வை போலீசாருடன் இணைந்து நடத்தினர் தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர்.
ஆங்கிலப் புத்தாண்டு கோயில்கள் நோக்கி மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது. அதுவும் குடும்பம், குடும்பமாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள்தான் அதிகம். இப்படி இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும் லட்டு ,ஜாங்கிரி உள்ளிட்ட இனிப்புகளை கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அனுப்பினர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரனும், தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார்.
கோலாகலமாய் பிறந்த புத்தாண்டில் பொதுமக்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வது, புத்தாடைகள் எடுப்பது என்று பரபரப்பாய் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்த நிலையில் தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் தஞ்சை அண்ணா சிலை அருகே அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தினர். ஆண்டின் முதல் நாளே ஹெல்மெட் அணியாமல் வந்தமைக்காக அபராதம் கட்டவேண்டுமா என்று வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் அவர்களுக்கு “இனிப்பு” அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் “இன்று ஆண்டின் முதல் நாள் – அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த இனிப்பை போலவே இந்த ஆண்டு உங்களுக்கு இனிப்பான அனுபவங்கள் இருக்கும் என்று வாழ்த்தி லட்டு மற்றும் ஜாங்கிரியை வழங்கினார். அபராதம் விதிப்பார்கள் என்று நினைத்த நிலையில் இனிப்பு வழங்கியதை கண்டு வாகன ஓட்டிகள் ஆனந்தமடைந்தனர். அதற்கு பிறகுதான் இருக்கு டுவிஸ்ட்... “ நீங்க இன்னைக்கி ஹெல்மெட் போடாம பைக்ல வந்திருக்கீங்க. இதுக்கு நான் கேஸ் போடணும். இருந்தாலும் இன்னைக்கி புது வருஷம் முதல் தேதி, அதுனால இந்த ஜாங்கிரியை சாப்பிடுங்க, நாளைக்கும் இப்படியே ஹெல்மெட் போடாம பைக்ல வந்தா நாங்கள் ஆகிடுவோம் ஆங்கிரி என்று ரைமிங்காக வார்னிங் கொடுத்து பேசி ஆச்சர்யப்படுத்தினார் .
மேலும் அந்த வழியாக வந்த அரசுப்பேருந்துகளை நிறுத்தி அதில் ஏறி அதிலிருந்த ஓட்டுனர் நடத்துனர் பேருந்து பயணிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதுடன் இனிப்பும் வழங்கினார் . போக்குவரத்து போலீசார் என்றாலே அபராதம் தான் விதிப்பார்கள் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்தும் சாலை விதிகளை மதிக்க அறிவுரை கூறியதை கண்டு வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியடைந்தனர் .
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜோதி அறக்கட்டளையினர் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து போலீசார் நடத்திய இந்த நூதன விழிப்புணர்வு மற்றும் இனிப்பு இன்ப அதிர்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையினர் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சமூக நலத் தொண்டுகளையும் செய்து மக்களிடம் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















