தலையாட்டி பொம்மை செய்வது எப்படி ? - தஞ்சாவூரில் மாணவர்களுக்கு பயிற்சி
மாணவர்களின் மனதை திடப்படுத்தும் விதமாக, எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மீண்டும் எழுவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மணிமண்டபத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது. புது தில்லி, இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை (இன்டாக்), பாரம்பரியக் கல்வி மற்றும் தகவல் மையத்தின் சார்பில் இந்தியா முழுவதும் அருகிவரும் கைவினைப் பொருள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்டாக் தஞ்சாவூர் மையத்தின் சார்பில் தஞ்சாவூர் இராஜராஜன் மணிமண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்குப் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினை கலைப்பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முனிசிபல் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வளாகத்திலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இம்மாணவர்களுக்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்ன, எப்படி செய்வது, வண்ணம் தீட்டுவது உள்ளிட்டவை குறித்த செயல்முறை விளக்கத்தை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கைவினைக் கலைஞர் பிரபு, கலையரசி பிரபு அளித்தனர்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் களிமண்ணால் செய்யப்படும் பொம்மைகள் ஆகும். தஞ்சையின் அடையாளமாக விளங்கும் இப்பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை ஆகும். காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படும் இப்பொம்மைகள் உலகெங்கும் புகழ் பெற்றவை. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்து எந்த நிலைக்குப் சென்றாலும், அத்தனையையும் தன்னம்பிக்கை மனதில் இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்பதை உணர்த்துவது தான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.
கைக்குழந்தைகள் தலையாட்டி பொம்மை பார்த்து அதே போல் ஆடுவதால், அவர்களின் எண்ணங்கள் நல்லபடியாகவும், இருபுறமும் ஆடுவதால் உடல்கள் வலுவாகும். இது போன்ற பாரம்பரியமான கலைகள் மாணவர்களிடத்தில் கொண்டு செல்லும் வகையிலும், மாணவர்களின் மனதை திடப்படுத்தும் விதமாக, எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் மீண்டும் எழுவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் தலையாட்டி பொம்மையைச் செய்து பார்த்தனர். நிறைவாக அதுகுறித்து ஒரு பக்க அளவிலான கட்டுரையும் எழுதினர். இந்தக் கட்டுரைகள் இன்டாக் புது தில்லி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இம்முகாமில் இன்டாக் தஞ்சாவூர் மைய உறுப்பினர்கள் முனைவர் இராம. கெளசல்யா, வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ்,டாக்டர் குணசேகரன், வரி ஆலோசகர்கள் ஆர். ரவிச்சந்திரன், சங்கர், புகைப்படக் கலைஞர் மணிவண்ணன், டாக்டர் சதீஷ்குமார், பாலகுமார் உள்ளிட்டோர், இன்டாக் கலை,பாரம்பரியப் பிரிவு தலைவர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே, செயலர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக, இன்டாக் பள்ளி பாரம்பரிய சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் வரவேற்றார். இறுதியில் பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.