மயிலாடுதுறையில் மழையால் மாணவர்கள் மகிழ்ச்சி; வியாபாரிகள் அதிர்ச்சி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வங்க கடல் பகுதியில் நிலவிய கீழடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இது வரும் 24 -ஆம் தேதி வாக்கி புயலாக வலுப்பெற்று 25 -ஆம் தேதி மேற்கு வங்கம் வங்கதேச கடற்கரை ஓரத்தில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் இடைவிடாமல் மிதமான மழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமானது முதல் ஒரு சில இடங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது.
மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, குத்தாலம், உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுத்தியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இந்த மழையால் சாலையோர வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதார பாதிக்கப்பட்டு உள்ளனர். சாலையோரத்தில் துணிக்கடை பழக்கடை பூக்கடை என பல்வேறு கடைகளை சாலையோர வியாபாரிகள் அமைத்து தங்களை வாழ்வாதாரத்தை நகர்த்தி வரும் நிலையில் இந்த மழையால் சாலையோரத்தில் கடைகள் போட முடியாமலும் மழையின் காரணமாக வியாபாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கில் கடன் வாங்கி முதலீடு செய்து தற்பொழுது மழையின் காரணமாக பொருளாதார இழப்பை சந்திக்க கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும், மழை விட்டால் மட்டுமே எங்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று சாலையோர வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். ஒருசில பகுதிகளில் அறுவடை செய்யப்பட்டு வரும் குறுவை சாகுபடி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது.