புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்: கும்பகோணத்தில் அதிகாரிகள் அதிரடி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை விற்பனை செய்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை விற்பனை செய்த கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்
புகையிலை பொருட்கள் விற்பனை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை வியாபாரிகள் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் கும்பகோணம் மாநகர உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சசிகுமார், முத்தையன் மற்றும் கலால் தாசில்தார் அருள்மணி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் கும்பகோணம் மாநகர பகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கும்பகோணம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் சுமார் 10.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு
இதையடுத்து அந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெட்டிக்கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் கடையை 15 நாட்கள் மூடி வைக்க உத்தரவிட்டனர்.
இதேபோல் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஒரு கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 250 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்களை நாச்சியார் கோவில் போலீசில் ஒப்படைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.
புகையிலை பொருட்கள் மீது அரசு தடை அமல்
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமுல்படுத்தியது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2025-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த சட்ட நடவடிக்கையை எதிர்த்து பல நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்குககளை விசாரித்த உயர் நீதிமன்றம், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடையை ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.