PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI Delhi BJP: டெல்லியில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை வழங்கப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

PM MODI Delhi BJP: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இலவசங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி:
மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களால், கடன்சுமை அதிகரிப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், நிதியுதவிகளால் பயனாளர்களின் வாழ்க்கை உயராது என்றும், அது மக்களை மேலும் இழிவுபடுத்துவதாகவும் பாஜகவினர் விமர்சிக்கின்றனர். அதோடு, நிதியுதவிகளுக்கு மாற்றாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மக்களின் வாழ்வாதாரம் உயரும். இலவசங்கள் தேர்தலை மையப்படுத்தி மட்டுமே வழங்கப்படுகின்றன. அவை சமூக முன்னேற்றத்திற்கு பயனளிக்காது எனவும், பிரதமர் மோடி உள்ளிட்டோர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
டெல்லி அரசு ஒப்புதல்:
இந்நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, டெல்லியில் புதியதாக அமைந்துள்ள பாஜக அரசு, தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்திற்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மகிளா சம்ரிதி யோஜனா தொடங்குவதற்கு ரூ.5,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். இருப்பினும், இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் அல்லது செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மகிளா சம்ரித்தி யோஜனா என்றால் என்ன?
- மகிளா சம்ரிதி யோஜனா என்பது பெண்களுக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பாஜக அரசாங்கத்தின் ஒரு லட்சியத் திட்டமாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு அரசாங்கத்தால் ரூ.2,100 உதவி வழங்கப்படும்.
- உண்மையிலேயே ஆதரவு தேவைப்படும் பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் குறிப்பிட்ட அளவுகோல்களை வகுத்துள்ளது:
- ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பெண்கள் தகுதி பெறுவார்கள்.
- அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விலக்கப்படுவார்கள்.
- ஏற்கனவே எந்தவொரு அரசாங்க ஓய்வூதியத்தையும் பெறும் பெண்கள் தகுதி பெற மாட்டார்கள்.
குவியும் விமர்சனங்கள்:
மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக சாடிவருகின்றனர். . இந்தத் திட்டத்தைத் தொடங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி கூற, இந்த திட்டத்திற்கான நிதியை திரட்ட பாஜக எப்படி திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், "மகிளா சம்ரிதி திட்டம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள், பிரதமர் நரேந்திர மோடி சொல்வதை நாட்டு மக்கள் நம்பக்கூடாது என்பதை நிரூபிக்கிறது. டெல்லியின் 10% பெண்கள் கூட இந்தத் திட்டத்தால் பயனடையப் போவதில்லை" என்று ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார்.
ஏமாற்றும் பாஜக?
தொடர்ந்து பேசுகையில், "18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த கௌரவம் வழங்கப்படும் என்று பாஜக கூறியிருந்தது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி பார்த்தால், டெல்லியில் சுமார் 72 லட்சம் பெண் வாக்காளர்கள் இருந்தனர். இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.21,600 கோடி. இப்போது, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மானியங்கள் உட்பட முழு வளர்ச்சி பட்ஜெட்டும் 37,000 கோடி என்று கருதினால், பட்ஜெட்டில் சுமார் 60% தொகையை ஒரே ஒரு திட்டத்திற்கு எப்படி ஒதுக்க முடியும்?" எனவும் காங்கிரஸ் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.
நெட்டிசன்கள் அட்டாக்:
இலவசங்களை பிரதமர் மோடி கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், அவர் அங்கம் வகிக்கும் பாஜக தலைமயிலான அரசுகள் மட்டும் இலவச திட்டங்களை செயல்படுத்தலாமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டெல்லி மக்களை இலவசங்கள் மூலமாக ஏமாற்றி வருவதாக தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினாரே? இப்போது பாஜக செய்வது மட்டும் நியாயமா? ஒருவேளை பிரதமர் மோடிக்கு தெரியாமலேயே டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துவிட்டதோ? பாஜக செய்தல் சரி, அதுவே எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் செய்தால் மட்டும் தவறா? எனவும் நெட்டிசன்கள் பாஜகவை கடுமையாக சாடி வருகின்றனர்.
26 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அண்மையில் தான், டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் நீண்ட இழுபறிக்கு பிறகே, ரேகா குப்தா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















