பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றி... தஞ்சாவூரில் பாரதிய ஜனதா கட்சியின் இனிப்பு வழங்கல்
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் முன்பு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தஞ்சாவூா்: பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தஞ்சையில் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் உமாபதி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த மாபெரும் வெற்றியை நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் .
அதன்படி தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் முன்பு தெற்கு மாவட்ட பா.ஜ.க.வினர் பீகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினரும் தஞ்சாவூர் சட்டமன்ற இணை அமைப்பாளருமான உமாபதி தலைமை தாங்கினார். தஞ்சாவூர் சட்டமன்ற பொறுப்பாளர் கர்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கபிலன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலாஜி, சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஹரிஹரன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் வக்கீல் சீனிவாசன், மாவட்ட அலுவலக செயலாளர் ராஜப்பா, மகளிர் அணி பொதுச்செயலாளர் சுபா, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ், நகர நிர்வாகிகள் ஐயப்பன், முருகேசன், பாலமுருகன், சுரேஷ், ரமேஷ், ராமகாடட்சம் , மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கார் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 66.91% வாக்குகள் பதிவானது. இது கடந்த 1951-க்குப் பிறகு மாநிலத்தில் நடந்த அதிகப்பட்ச வாக்குப்பதிவாகும். அதேபோல் பீகார் தேர்தலில் இந்த முறை அதிகபட்சமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். 71.6% பெண்கள் வாக்களிக்க வந்த நிலையில், ஆண்கள் 62.8% மட்டுமே வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது.
அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரஸின் மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஓர் இடத்தைக் கூட வெல்லவில்லை. தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பீகார் தேர்தலில் பாஜகவின் வெற்றிதான் இப்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.





















