Stray Dogs and Cattles | சாலைகளில் திரியும் கால்நடைகள்... சாட்டையைச் சுழற்றிய நீதிமன்றம்- பிரச்சினையும் தீர்வும்!
கால்நடைகள் சுற்றித் திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக் காட்சி சாலையா?
சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவருமே வாகனத்தில் செல்லும்போது ஏதாவது ஒரு தருணத்தில் கால்நடைகளை எதிர்கொண்டிருப்போம். வாகனத்தில் நிலைதடுமாறி இருப்போம். அதே சூழலை எதிர்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பொதுநல வழக்கொன்றில் கால்நடைகள் சுற்றித் திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக் காட்சி சாலையா? என நேற்று (பிப்.9) கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பசுக்கள், தெரு நாய்கள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் சாலைகளில் திரிவதாகவும், போக்குவரத்து மிகுந்த கடற்கரைச் சாலையில் கால்நடைகள் கடந்து செல்வதைப் பார்க்க முடிவதாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விலங்குகள் நல ஆர்வலரும் தேசிய கால்நடை பாதுகாப்பு அமைப்பின் (People for Cattle in India- PFCI) நிறுவனருமான அருண் பிரசன்னா ஏபிபி நாடுவிடம் விரிவாகப் பேசினார்.
சென்னை ஐஐடியில் 150 நாய்களை அடைத்துவைத்த விவகாரத்தில் நாய்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள்தான் (PFCI) அந்தப் பொதுநல வழக்கை கடந்த 2021ஆம் ஆண்டு தாக்கல் செய்தோம். அந்த வழக்கில்தான் நேற்று (பிப்.9) தலைமை நீதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உரிமையாளர்கள் வளர்க்கும் பசுக்கள். மற்றொன்று சாலைகளில் தானாகத் திரியும் பசுக்கள். இரண்டாவது வகைக்குக் கழுத்தில் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவை இருக்காது.
சென்னையைச் சுற்றிலும் பள்ளிக்கரணை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இத்தகைய மாடுகள் கும்பலாக 10, 20 என்ற எண்ணிக்கையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதை நாம் பிடிக்கச் சென்றால் மிரண்டு ஓடிவிடும். இவற்றின் முன்னோர்கள் (பசுக்கள்) எல்லாம் இந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். பின்னர் நிலப் பரப்பு குறைந்து, கட்டிடங்கள் அதிகரித்த பிறகு அவற்றுக்குப் போக்கிடங்கள் இல்லாமல் ஆகிவருகின்றன. இதனாலும் இரவு நேரத்தில் தார் சாலையின் உள்ள வெப்ப கதகதப்பு காரணமாகவும் பசுக்கள் சாலைகளில் படுத்துக் கிடக்கின்றன. வாகனங்களில் மோதி, அடிபடுகின்றன. இறந்தும் போகின்றன. இதில் பசுக்கள் மீது எந்தத் தவறும் இல்லை.
பால் கறந்தால் போதும் என்ற மனநிலை
உரிமையாளர்கள் வளர்க்கும் பசுக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தங்களின் பசு விபத்தில் சிக்காமல் வாழ வேண்டும் என்று எண்ணம் பசு உரிமையாளர்களுக்கு இருப்பதில்லை. பசுக்களுக்கு சத்தான உணவு, கோமாரி தடுப்பூசி ஆகியவற்றை அளிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. மாடு விரைவில் சினையாக வேண்டும். கன்றை ஈன்று ஆண்டு முழுவதும் பால் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக உள்ளது.
இதனால் தெருக்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் ஆகியவற்றை உண்ணும் பசுக்கள் செரிமானப் பிரச்சினைக்கு ஆளாகின்றன. அவை பெரும்பாலும் சாலைகளை ஒட்டியே திரிகின்றன. இதில் சில மாடுகள் சாலையிலேயே கன்றை ஈன்ற சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன். பின்பு தேடி வரும் பசு உரிமையாளர்கள் கன்றை வீட்டில் கட்டி வைத்துவிடுவர். பகலெல்லாம் வெளியில் திரிந்துவிட்டு வரும் பசு, மாலையில் வந்து கன்றுக்குப் பால் கொடுக்கும். அப்போதும் காலையிலும் பாலை உரிமையாளர்கள் கறந்துகொள்வர்.
சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி யார் மாடு வளர்க்கிறார்களோ, அவர்கள்தான் கட்டி வைக்க வேண்டும். சாலைகளில் அவிழ்த்து விடக்கூடாது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை.
செளகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பசு உரிமையாளர்களே நச்சு கலந்த ஆக்ஸிடாக்சின் (oxytocin) ஊசியைத் தினந்தோறும் போட்டு, பசுவிடம் இருந்து அதீதப் பாலை உறிஞ்சுவதும் நடக்கிறது. அந்த ஊசியைப் பசு உரிமையாளர்களுக்கு விற்கக்கூடாது என்று சட்டமே உள்ளது. ஆனால் அவர்களுக்கு ஊசி எப்படியோ கிடைத்து விடுகிறது. அதிகாலை நேரத்தில் அங்கு சென்றால், நீங்களே பசுக்களுக்கு அந்த ஊசி போடப்படுவதை நேரில் பார்க்கலாம் என்கிறார் அருண் பிரசன்னா.
கால்நடைகள் - மனித விபத்து
யானைகளைப் போலவே, நகரத்தில் பசு - மனித விபத்துகளின் எண்ணிக்கையும் தெரு நாய்களால் ஏற்படும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டில் யானைகளுக்கும் நகரத்தில் பசுக்களுக்கும் வாழ்விடங்கள் குறைந்துவிட்டன.
இதுகுறித்து மேலும் பேசும் அருண் பிரசன்னா, நாய்களுக்கு அடிபட்டாலாவது அதைக் காப்பாற்றுவது எளிது. ஆனால் பசுக்களுக்கு அடிபட்டால் அவ்வளவுதான். அவற்றின் அதிக கனம், போக்குவரத்து வாகனங்கள் போதாமை, போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் இன்மை ஆகியவற்றால், பசுக்களைக் காப்பாற்றுவது கடினமாக உள்ளது.
கசாப்புக் கடைக்குச் செல்லும் பசுக்கள்
நெடுஞ்சாலை டோல் வழியாக நீங்கள் செல்லும்போது ஒருநாள் நிறுத்தி பசுக்களுக்கு அடிபட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் போக்குவரத்துக் காவலர்களை அழைப்பார்கள். காவலர்கள் மருத்துவமனைக்கு பதிலாக கசாப்புக் கடை உரிமையாளரை போனில் அழைத்துச் சொல்வார்கள். 2 மணி நேரத்தில் அடிபட்ட பசு கசாப்புக் கடையில் இருக்கும். உரிமையாளர்களுக்குத் தெரிய வந்தால், அவருக்குப் பணம் கிடைக்கும். அதைக் கொண்டு அவர் இன்னொரு பசுவை வாங்குவார். இது இன்று, நேற்றில்லை... 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
என்னதான் தீர்வு?
தெருக்களில் சுற்றித் திரியும் பசுக்களைப் பிடித்துச்செல்லும் சென்னை மாநகராட்சியினர், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,500 அபராதம் விதித்துப் பசுக்களை ஒப்படைத்து விடுகின்றனர். இதனாலேயே சிறிய தொகைதானே, பிடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் உரிமையாளர்களுக்கு வந்துவிடுகிறது.
இதைத் தவிர்க்க ஒவ்வொரு பசுவுக்கும் காதில் ஒரு டேக் (Tag) பொருத்த வேண்டும். மைக்ரோசிப்பையும் பொருத்தலாம். அதில் உரிமையாளர், மாட்டுக்கான தடுப்பூசி, சினை, வயது உள்ளிட்ட தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் உரிமையாளரின் விவரங்கள் அரசின் கைக்குக் கிடைக்கும். பசுக்கள் இரண்டு முறைக்கு மேல் அரசிடம் பிடிபட்டால், பசு பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதிக அபராதம் விதிக்கப்பட்டு, உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
மின்னும் காலர்கள்
அதேபோல மாடுகளுக்கும் நாய்களுக்கும், அவற்றின் கழுத்தில் இரவில் மின்னும் வகையிலான காலர்களை மாட்டிவிடலாம். பசுக்களின் கொம்பில் பிரதிபலிக்கும் வகையிலான வண்ணங்களைப் பூசலாம். இதன்மூலம் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதி நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் வகையில் முகாம்களை நடத்தலாம். சாலைகளில் தானாகத் திரியும் பசுக்களுக்காக அரசே பசுக்கள் பாதுகாப்பு / மறுவாழ்வு மையத்தை அமைக்கலாம். பசுக்களை மீட்டு, அங்கே சேர்க்க வேண்டும். எங்களைப் போன்ற தொண்டு நிறுவனங்களை அரசு இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தால் உரிமையாளர்கள் நிறையப் பேரைப் பரவலாகச் சென்றடையும் என்கிறார் அருண் பிரசன்னா.
தெரு நாய்களின் அவலம்
கொரோனா காலத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளும் விழாக்களும் குறைந்துவிட்டன. தங்களுக்கே உணவில்லாமல் துன்புறும் மனிதர்கள் அதிகரித்து வருவதால், தெருவில் திரியும் நாய்களுக்கு உணவிடுவது குறித்துப் பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை.
பால் என்ற காரணியால் ஓரளவேனும் பசுக்களுக்கு உணவு கிடைத்துவிடுகிறது. ஆனால் நாய்களுக்கு அப்படியில்லை. தொண்டு நிறுவனங்கள்தான் அவற்றுக்கு உணவளித்து, கருத்தடை செய்து யாருக்காவது தானமாக அளிக்க முயல்கிறோம். எனினும் எங்களால் ஒரு அளவுக்கு மட்டுமே செய்ய முடிகிறது.
சென்னை மாநகராட்சியில் சுமார் 1.50 லட்சம் நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றில் சுமார் 10 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமே முறையாக கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் நாய்களுக்குக் கருத்தடைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம், போதிய வசதிகள் இன்மை ஆகியவற்றால் இவ்வாறு நேர்கிறது. அதேபோல விலங்குகள் நலத்துறை செய்ய வேண்டிய இந்த வேலையை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதனாலும் தொய்வு ஏற்படுகிறது.
இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ’’தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசிடம் இதுகுறித்து எடுத்துச் செல்லப்படும்’’ என்று தெரிவித்தனர்.
உயிர் எல்லாவற்றுக்கும் பொதுதான். வாயில்லாத ஜீவன் என்பதற்காக அதன் வயிற்றில் அடிப்பது மானுடத் தன்மையற்ற செயல் என்பதை அனைவரும் புரிந்து நடக்க வேண்டியது அவசியம்.