TN Fact Check: விஸ்வரூபம் எடுக்கும் அலையாத்தி காடுகள் விவகாரம்.. மீண்டும் விளக்கம் தந்த தமிழ்நாடு அரசு!
அலையாத்தி காடுகளின் பரப்பளவு குறித்து சமூக வலைதளங்களில் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அலையாத்தி காடுகள் குறித்து தவெக தலைவர் விஜய் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அலையாத்தி காடுகள்:
விஜய்யின் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆனாலும், தமிழக அரசின் சரிபார்ப்பகம் தந்த பதிலுக்கு பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், நாகப்பட்டினம் அலையாத்தி காடுகள் பற்றி யூ டியூபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசின் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
பரப்பளவு:
அதில் அவர்கள் அளித்துள்ள பதிலில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் உள்ள அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 3080 ஹெக்டேர். 2021ம் ஆண்டின் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 2830 ஹெக்டேர்.

2022 முதல் தற்பொழுது வரை எழுப்பப்பட்ட அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 250 ஹெக்டேர் (1 ஹெக்டேருக்கு எழுப்பப்பட்ட அலையாத்திகளின் எண்ணிக்கை சுமார் 1000)
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அலையாத்திக் காடுகள் பற்றி பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்று வனத்துறை விளக்கமளித்துள்ளது.
'நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் உள்ள அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 3080 ஹெக்டேர். 2021ம் ஆண்டின் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 2830 ஹெக்டேர். 2022 முதல் தற்பொழுது வரை எழுப்பப்பட்ட அலையாத்திக்காடுகளின் பரப்பளவு 250… https://t.co/jvBlscSPr0 pic.twitter.com/cnQ4DfVdHY
— TN Fact Check (@tn_factcheck) September 22, 2025
தமிழ் வாழ்க:
மேலும், நாகப்பட்டினம் மட்டுமல்லாமல் 2023-2024ம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் அலையாத்திக் காடுகள் உருவாக்கப்படும் போது பொதுவாக அமைக்கப்படும் மீன்முள் வடிவ வாய்க்காலுடன் 9 ஹெக்டேர் பரப்பளவில் ' தமிழ் வாழ்க ' எனும் சொற்களின் வடிவிலும் வாய்க்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
விஜய் பரப்புரைக்கு பிறகு அலையாத்திக் காடுகள் பற்றிய விவாதம் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட்கள், திமுக கோட்டையாக உள்ள நாகையில் இந்த அலையாத்தி காடுகள் விவகாரம் அடுத்தடுத்த பரப்புரையில் முக்கியத்துவம் பெறலாம் என்று கருதப்படுகிறது.






















