Transgender Issue: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் - காரணம் இதுதான்
மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருநங்கைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
சேலம் மாநகர் சிவதாபுரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவதாபுரத்தில் உள்ள திருநங்கைகள் இல்லத்திற்கு சிதம்பரத்தைச் சேர்ந்த திருநங்கை ஹரி கிருஷ்ணன் என்கிற வாராகி அடைக்கலம் கேட்டு வந்துள்ளார். அப்போது தனது பெற்றோர்கள் என்னை அடித்து சித்திரவதை செய்ததாக கூறி திருநங்கைகளுடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநங்கை வாராகியின் பெற்றோர் அடியாட்களுடன் சிவதாபுரத்தில் உள்ள திருநங்கைகள் இல்லத்திற்கு வந்துள்ளனர். பின்னர் தங்களுடைய மகனை அழைத்து செல்வதற்காக வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். இதற்கு வாராகி பெற்றோர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நான் திருநங்கைகளுடன் தான் இருப்பேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் திருநங்கைகளை மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து திருநங்கைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் வாராகியின் பெற்றோரை அழைத்து சமாதானமாக போகுமாறு கேட்டுள்ளனர். அப்போது திருநங்கைவாராகி தான் பெற்றோருடன் செல்ல மாட்டேன், திருநங்கைகளுடன் தான் இருப்பேன் என கண்டிப்புடன் காவல் நிலையத்தில் கூறிவிட்டார்.
பின்னர் திருநங்கைகள் காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் சிவதாபுரத்தில் உள்ள திருநங்கைகள் வீட்டிற்கு சென்று திருநங்கைகளை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் சாலை மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டவுன் காவல் துறையினர் வந்து திருநங்கைகளை சமாதானம் செய்தனர். அப்போது திருநங்கைகள் தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. ஆணாக இருந்து திருநங்கையாக மாறிய வாராகி எங்களுடன் தான் இருக்க விருப்பப்படுகிறார். பெற்றோர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால் வாராகியை அனுப்பி வைக்கக் கோரி தொடர்ந்து மிரட்டுகிறார்கள். தங்களுடன் வரவில்லை என்றால் வாராகியையும், அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் திருநங்கைகளையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறினர். மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருநங்கைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.