மேலும் அறிய
Advertisement
அர்ச்சனைப் பூக்களுக்கு தயாராகும் கோவில் நந்தவனங்கள்
கோவில்களில் பராமரிக்கப்படாமல் இருந்த நந்தவனங்களை மீட்டெடுக்கும் முயற்சியை திருவாரூர் மாவட்டத்தில் தனியார் அமைப்பினர் துவங்கியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நிறைய செலவு செய்து நடத்தப்படுகிறது. அதே வேளையில் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஒரு காலத்தில் இயற்கை எழிலோடு காட்சி அளித்த நந்தவனங்கள் தற்போது மிகவும் பரிதாப நிலையில் உள்ளன. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் கிரீன் நீடா அமைப்பினர் இறங்கியுள்ளனர். அறநிலையத்துறையின் அனுமதியைப் பெற்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தை செப்பனிட்டு 300 க்கும் மேற்பட்ட பூ வகை மரங்களை நடவு செய்துள்ளனர்.
பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. பாதுகாப்பு கூண்டு அமைப்பதற்கே அதிகம் செலவாகிறது. தனிப்பட்ட பொது அமைப்புகள் இதனை செய்வதில் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்படும் மரக்கன்றுகள் சாலை விரிவாக்கத்தின்போது வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. ஆற்றுக்கரை ஓரம் நடப்படும் மரக்கன்றுகள் கரைகள் விரிவாக்கத்தின் போது வெட்டி சாய்க்கப்படுகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டே திருக்கோவில்களில் உள்ள நந்தவனங்களில் மரக்கன்றுகளை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது கிரீன் நீடா அமைப்பு.
கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் புதர் மண்டிக்கிடந்த நந்தவனத்தை ஜெசிபி மூலம் கிட்டத்தட்ட 20 மணி நேரத்திற்கு மேல் இயக்கி சுத்தம் செய்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டு, 300 மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சொட்டு நீர் பாசனமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு நந்தவனத்தை பராமரித்து வருகின்றனர்.
மற்ற இடங்களில் மரம் வளர்த்து பராமரிப்பதை விட கோவில்களில் பம்புசெட் வசதி உள்ளதால் எளிமையாக மரம் வளர்க்க முடிகிறது. 15 அடிக்கும் உயரமான மதில் சுவர்கள் நான்கு பக்கங்களிலும் உள்ளதால் பாதுகாப்பு கூண்டு செலவு மிச்சமாகிறது. தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் வளர்க்கும் தன்னார்வ அமைப்புகள் பழங்கால கோவில்களில் உள்ள நந்தவனங்களில் மரக்கன்றுகளை வளர்க்க முன்வர வேண்டும் என்கிறது கிரீன் நீடா அமைப்பு. இந்ந நந்தவனத்தில் இருந்து பறிக்கப்படும் பூக்கள் தினந்தோறும் சுவாமியின் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.
கோவில் வளாகத்தில் நடப்பட்டுள்ள பெரும்பாலான மரங்கள் வாசனை மிகுந்த பூக்களை பூத்துக்குலுங்கி நிற்பதால் ஆலயத்தை சுற்றிவலம் வருபவர்களுக்கும், ஆலயத்தைச்சுற்றி குடியிருப்பவர்களுக்கும் நறுமணம் மிகுந்த காற்று கிடைக்கிறது. தமிழகம் முழுவதும் ஆலயங்களில் உள்ள நந்தவனங்களை பராமரிக்க வேண்டும் என்பதே கிரீன் நீடா அமைப்பின் எண்ணமாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion