TN Assembly: இன்றுடன் முடிகிறது சட்டபேரவை: இதுவரை வெளியான அதிரடி அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், கடைசி நாளில் உள்துறை அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான, நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து அலுவல் ஆய்வுக்குழுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கேள்வியும், பதிலும்:
அதன் தொடர்ச்சியாக மார்ச் 23, 24, 27 ஆகிய தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து 28ம் தேதி நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைக் தொடர்பாக, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர்.
மானியக்கோரிக்கை விவாதம்:
அதைதொடர்ந்து மார்ச் 29ம் தேதி முதல் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முதலில் நீர்வளத்துறை தொடங்கி இந்து சமய அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கைகள் வரை நடைபெற்றுள்ளது. அப்போது பல்வேறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பல்வேறு விவகாரங்களில் காரசார விவாதம் நடைபெற்றது. பல்வேறு சமயங்களில் அதிமுக மற்றும் பாஜகவின் வெளிநடப்பு செய்தனர். குறிப்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் தொடர்பான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முக்கிய அறிவிப்புகள்:
மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தமிழக அரசு சார்பிலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலினாலும் சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, குடும்பதலைவிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு தொடர்பாக பள்ளி பாடநூலில் பாடம் இடம்பெறுவது, பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை மாநில முழுவதும் விரிவுபடுத்துவது, எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.30 ஆயிரம் ஆக உயர்த்துவது, முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதோடு, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு:
இந்நிலையில், இன்று நடைபெறும் உள்துறைக்கான மானியக்கோரிக்கை விவாதத்துடன், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இதில் காவல்துறை மேம்பாடு மற்றும் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படும்.
இதனிடையே இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. முதலமைச்சரின் பதிலுரையை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.