இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து - விதிமுறைகள் என்ன?
ஜூன் 21-ம் தேதியில் இருந்து கொரோனா தொற்று அதிகம் குறையத் தொடங்கிய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் பொது போக்குவரத்து செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து செயல்பட ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்தில் இருந்து கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாமல் இருந்தது. ஜூன் முதல் வாரம் தொடங்கி தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தது. இதன்பின் மாநிலத்தின் புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் சரியத் தொடங்கின. இதனையடுத்து, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது.
முதற்கட்டமாக, ஜூன் 21ம் தேதியில் இருந்து கொரோனா தொற்று அதிகம் குறையத் தொடங்கிய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் பொது போக்குவரத்து செயல்பட அனுமதி அளித்தது. போக்குவரத்து செயல்பட்ட ஒரு வாரக் காலத்தில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கவில்லை என்பதை தெளிவு படுத்தியவுடன், ஜூன் 28-ஆம் தேதி 2-ம் வகைகளில் அமைப்பெற்றுள்ள 23 மாவட்டங்களுக்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இதன்காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாக தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, வடதமிழகத்தில் அடுத்தடுத்து இருக்கும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்தன.அதேபோன்று, தென்தமிழகத்தில் அடுத்தடுத்து இருக்கும் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருந்தன.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைசச்சர், "சில மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது உண்மைதான். சொற்ப அளவில் அதிகரித்துள்ளன. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்த்தப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில், இதுவரை 33,000-ஐ தாண்டியது கொரோனா இறப்பு எண்ணிக்கை..!
இந்நிலையில், இன்று முதல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவில், "மாவட்டத்திற்குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்" என்று அறிவித்தது.
மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வெளியே செயல்படும் உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு உண்ண அரசு அனுமதியளித்தது. மேலும்,வணிக வளாகங்கள் காலை 9:00 மணி முதல் இரவு 6:00 மணி வரை செயல்படலாம் என்றும், அங்குள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி உணவு உண்ண அனுமதி. திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு தனது உத்தரவில் தெரிவித்தது.
பொதுப்போக்குவரத்து இயக்கப்பட்ட பின்பு அதிகரித்துள்ளதா கொரோனா தொற்று எண்ணிக்கை?