புதிய முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது" என்றார்.
3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்பதல்: தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "44,125 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் வந்துள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். பசுமை எரிசக்தி துறையில் 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதால், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படும் ஸ்டாலின், செப்டம்பர் 14ஆம் தேதிதான், தமிழகம் திரும்புகிறார்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை வேகப்படுத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதற்குபிறகு, மக்களவை தேர்தலும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டமும் நடைபெற்றதால் கடந்த 7 மாதங்களாக அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.
கடந்த ஓராண்டாகவே, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "வரும் 19ஆம் தேதிக்கு மேல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம்" என சொல்லியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.