சேலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரம் - சிபிசிஐடி விசராணைக்கு முதல்வர் உத்தரவு
’’முதல் நிலை காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’
சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் என்பவர் திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட கிளைச்சிறையில் கடந்த 11ஆம் தேதி அன்று அடைக்கப்பட்டார். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி பிரபாகரன் கடந்த 12ஆம் தேதி சேலத்தில் உள்ள சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்தார்.
மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணத்திற்கு காவல்துறை துன்புறுத்தலே காரணம் என கூறியும் சம்பந்தப்பட்ட காவல்துறை மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த 13 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரத் குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அரசு வேலை காவல்துறை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பிரபாகரன் மரணம் தொடர்பாக அவரது சகோதர் சக்திவேல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாற்றுத்திறனாளி பிரபாகரனின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் சூபிரண்ட் பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல் நிலை காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம் சரக டிஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
இதையடுத்து, நீண்ட நாட்களாக உடலை வாங்க மறுத்த பிரபாகரனின் உறவினர்கள் நேற்று உயிரிழந்த பிரபாகரனின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் வழக்கை சிபிசிஐடி விசாரிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்