கல்லூரி மாணவிகள் முதல் ஆளுநர் மாளிகை வரை..! நிர்மலா தேவி வழக்கின் பரபர பின்னணி - ஓர் அலசல்
மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்திய நிர்மலா தேவி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சர்ச்சையை கிளப்பிய முக்கியமான வழக்குகளில் ஒன்று பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகான காலத்தில் தமிழ்நாட்டில் பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி அரசியல் களத்தை தலைகீழாக திருப்பி போட்டன.
தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு:
அதில், நிர்மலாதேவி வழக்கில் பல மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருந்தால், அனைவரின் கவனமும் அதன் மீது திரும்பியது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் நிர்மலாதேவி. தமிழக உயர்கல்வித்துறையில் செல்வாக்குமிக்கவராக வலம் வந்து கொண்டிருந்தார்.
தனது கல்லூரியை தாண்டி உயர்கல்வித்துறை வரை செல்வாக்கு செலுத்தும் இவரின் செயல்பாடுகள் சர்ச்சையாகவே இருந்திருக்கின்றன. அப்போதுதான் மாணவிகளின் புகார்கள் தமிழ்நாட்டு அரசியலில் புயலை கிளப்பியது. தனது கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி, தவறான பாதைக்கு அழைத்து செல்ல இவர் முயன்றது அம்பலமானது.
இதில், உயர்கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்தும் நபர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த உயர்கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்தும் நபர்களுக்கு பெண் பேராசிரியை துணை போனது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
இதையும் படிக்க: 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?
ஆளுநர் மாளிகை வரை நீளும் சந்தேக பார்வை:
இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால் பாதிக்கப்பட்ட மாணவிகள், நிர்மலாதேவிக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்தில் புகார் கூறியுள்ளனர். நிர்மலாதேவி பேசியதை போனில் ரெக்கார்ட் செய்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், இந்த புகார் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி, மாணவிகளுடன் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ மற்றும் போன் உரையாடல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றமும் உத்தரவிட்டது.
ஆடியோ மற்றும் போன் உரையாடல்கள் வெளியான அடுத்த நாளே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள், பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார், ஆறு மணி நேரத்துக்குப் பின்னர், பேராசிரியை நிர்மலா தேவியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு?
மாணவிகளின் எதிர்காலத்தை சீர்குலைக்க முயன்றவர்களில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை சம்பந்தப்பட்டது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
வழக்கின் முக்கியத்துவத்தை கருதி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நிர்மலா தேவிக்கு எதிரான புகாரில் ஆளுநர் மாளிகை மீதும் சந்தேக கண்கள் விரிவடைந்தது.
இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் 2018ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனியே ஒரு விசாரணைக்குழுவை அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
நிர்மலா தேவி மட்டும்தான் குற்றவாளியா?
வழக்கில் நடைபெற்ற தொடர் விசாரணையின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விருதுநகரில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இச்சூழலில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, நிர்மலா தேவி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முருகன், கருப்பசாமி மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: அந்தரங்க வீடியோவில் பெண் அரசு அதிகாரிகள்.. வசமாக சிக்கிய முன்னாள் பிரதமரின் பேரன்.. நடந்தது என்ன?